தமிழ்த் தேசியத்தைச் சிங்களத் தேசியத்துக்குள் கரைக்கும் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றது: தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன்
முள்ளிவாய்க்கால் யுத்தத்துக்குப் பின்னரான தமிழ் அரசியல் போலித் தமிழ்த் தேசிய வாதிகளால் திசை திருப்பப்பட்டு வருகிறது. இவர்களால் தமிழ்த் தேசியத்தைச் சிங்களத் தேசியத்துக்குள் கரைக்கும் நிகழ்ச்சி நிரல் திட்டமிட்டு மிகவும் நாசூக்காக முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரை நிராகரித்து சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்கக் கோரியவர்கள் இவர்கள்தான்.
இன்னொருபுறம் தமிழ்த்தேசியம் பேசும் அரசியல்வாதிகளே மதுபானச்சாலை அனுமதி பத்திரங்களைப் பெற்று விற்றுச் சம்பாத்தியம் செய்கிறார்கள். இந்தப் போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமும் ஜனநாயக தமிழரசுக் கட்சியும் இணைந்து சனநாயகத் தமிழ் அரசுக் கூட்டமைப்பாக இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது. இது தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது தமிழ் மக்கள் பொதுச்சபை பாராளுமன்றத் தேர்தலில் நேரடியாக ஈடுபடமுடியாது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதனால் இப்போது தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு என்ற அமைப்பு இல்லை.இரண்டு தரப்புகளும் இணைந்து இறுதியாக நிகழ்த்திய கலந்துரையாடலில் தமிழ் மக்கள் பொதுச்சபையும் பங்கேற்று தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பாகப் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளாவிடில் தமிழ்த் தேசியப் பசமை இயக்கம் இந்த அணியில் இடம்பெறாது என்று மிகத் தெளிவாக தெரியப்படுத்தியிருந்தோம்.தமிழ் மக்களின் கூட்டு உழைப்பால் பிரபல்யமான சங்குச் சின்னத்தைத் தனிப்பட்ட சில கட்சிகள் தந்திரமாகத் தங்கள் வெற்றிக்காகப் பயன்படுத்துவது அரசியல் அறமல்ல என்பதால் சங்குக்கூட்டணியில் இடம் பெறமுடியாது என்பதை நாம் தெரிவித்திருக்கின்றோம்.
தமிழரசுக்கட்சியில் நிலவுகின்ற தமிழர் விரோத, ஜனநாயக விரோதப் போக்குகளால் அக் கட்சியில் இருந்து உண்மையான தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.அவர்கள் உருவாக்கியுள்ள ஜனநாயக தமிழரசுக் கட்சியுடன் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமும் இணைந்து சனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பு உருவாகியுள்ளது. இக்கூட்டமைப்பு சுயேச்சையாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.சி தவராசா தலைமையில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றது.ஏற்கனவே தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பயன்படுத்திய மாம்பழம் சின்னத்தையே நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கேட்டு இத்தேர்தலில் எமது சின்னமாகப் பெற்றுக்கொண்டுள்ளோம். காலத்தின் கட்டாயமாகப் போட்டியிடுகின்ற எங்களை ஆதரிக்க வேண்டுமென்று தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் தெரிவித்தார்