இலங்கையின் புதிய அரசாங்கத்தின் தீர்மானம் கவலையளிக்கிறது:  சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவிப்பு

இலங்கையின் புதிய அரசாங்கம் கடந்த கால கொள்கைகளை  தொடர்வதற்கும் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை எதிர்ப்பதற்கும் தீர்மானித்தமை ஏமாற்றமளிக்கின்றது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரதி பிராந்திய இயக்குநர் பாபு ராம் பண்ட் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளமை இலங்கையில் காணப்படும் மனித உரிமைகள் கரிசனை குறித்து சர்வதேச சமூகம் தொடர்ந்தும் கவனம் செலுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. புதிய தீர்மானத்தின் மூலம் ஆணை நீடிக்கப்பட்டமை பொறுப்புக்கூறலிற்கு ஆதரவளிப்பதை நோக்கிய  வரவேற்கத்தக்க விடயம்.

எனினும் இந்த தீர்மானம் மேலும் ஒரு வருடகாலத்திற்கு மாத்திரம் நீடிக்கப்பட்டுள்ளமை ஏமாற்றமளிக்கின்றது.சிவில் சமூகத்தினரும் சர்வதேச அமைப்புகளும் ஆணையை இரண்டு வருடங்களிற்கு நீடிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர். சமீபத்தில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற அடுத்த மாதம் பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நாடு என்ற வகையில் இஅரசியல் மாற்றத்தை எதிர்கொண்டுள்ள நாடு என்ற வகையில் இலங்கை கடந்த காலங்களில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துடன் சிறந்த ஈடுபாட்டை பேணுவது அவசியம்.இதன் காரணமாக இலங்கையின் புதிய அரசாங்கம் கடந்த கால கொள்கைகளை  தொடர்வதற்கும் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை எதிர்ப்பதற்கும் தீர்மானித்தமை ஏமாற்றமளிக்கின்றது.

பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புகூறுவதற்கு கிடைத்துள்ள வளங்களை பயன்படுத்து அரசாங்கம் தயாராகவுள்ளதா என்ற சந்தேகத்தை இது எழுப்பியுள்ளது.இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் சர்வதேச சமூகம் நீதி உண்மை இழப்பீட்டு விவகாரங்களில் அர்த்தபூர்வமான  முன்னேற்றத்தை அடைவதற்காக சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் ஈடுபாட்டை பேணவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.