ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் முன்மொழியப்பட்ட தீர்மான வரைவை நிராகரித்தது அனுர அரசு.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் முன்மொழியப்பட்ட தீர்மான வரைவை இலங்கை நிராகரித்துள்ளது. 51ஃ1 தீர்மானத்திற்கு நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் யுத்த குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் எந்த தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் நகல்வடிவை நிராகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், உள்நாட்டு நடைமுறைகள் மூலம் நல்லிணக்கம் உள்ளிட்ட முக்கிய மனித உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவை மற்றும் ஏனைய மனித உரிமைப் பொறிமுறைகளுடன் ஒத்துழைப்புடன் அர்த்தமுள்ள கலந்துரையாடல்களில் இலங்கை ஈடுபடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.