ஆட்சியை கைப்பற்றும் காங்கிரஸ் கூட்டணி

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளுக்கும் கடந்த செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதியென 3 கட்டங்களாக நடைபெற்று முடிந்தன. காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி, பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தேர்தலை சந்தித்தன.

இன்று காலை 8 முதல் வெளியான வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரத்தில் இருந்தே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இதில், 90தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அதில் முன்னிலை நிலவரம் கடந்து, வெற்றி அறிவிப்புகளும் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. தற்போது வரையில் வெளியான தகவலின்படி, தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் முன்னிலை வகித்து இந்த கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. பாஜக 29 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா இந்த முறை 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.

அதில் , புட்காம் தொகுதியில் உமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கந்தர்பால் தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறார். இந்த முன்னிலை நிலவரங்களை அடுத்து, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் புதிய முதல்வராக உமர் அப்துல்லா தேர்வு செய்யப்படுவார் என அறிவித்துள்ளார்.