முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,அவரின் பாதுகாப்பிற்கு நிரந்தரமாக பொறுப்பேற்றிருந்த 307 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், தற்காலிக அடிப்படையில் 24 பேரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவலை பொலிஸார் மறுத்துள்ளனர். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 50 விசேட அதிரடிப்படையினர் உள்ளடங்கிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு தேவையான ஆளணி எண்ணிக்கை மீளாய்வு செய்யப்பட்டு விரைவில் ஒதுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.