தமிழரசுக்கட்சிக்குள் நடைபெறும் அதிரடி மாற்றங்கள்

மாவை சேனாதிராசா இலங்கை தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவியை துறந்தாலும் கட்சி உறுப்பினராக அவர் தொடர்ந்தும் பதவி வகிப்பாரெனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக அதன் கொழும்பு கிளைத் தலைவர் கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.

கட்சியில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து தாம் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். தனிநபர்களின் தன்னிச்சையான போக்குக்குள் சிக்குண்டுள்ள தமிழரசு கட்சியுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாது. தமிழ்த் தேசியத்தை உரிய பலத்துடன் நிலைநாட்டுவதற்கான வழிவகைகள் குறித்து எதிர்காலத்தில் சிந்திப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் கே.வி.தவராசா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து விலக, சசிகலா ரவிராஜ் தீர்மானித்துள்ளார்.  எதிர்வரும் பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் அறிவிக்கப்பட்ட நிலையில்  இதில் சசிகலா ரவிராஜின் பெயர் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடதக்கது