வடக்கில் மதுபானச்சாலைகள் விடயம் : ஜனாதிபதி அனுரவிற்கு பறந்த அவசரக்கடிதம்
யாழ்ப்பாணம் ஊரணி, தையிட்டி, மயிலிட்டி ஆகிய கிராமங்கள் உள்ளடங்கிய பகுதியில் புதிதாக மதுபானசாலை அமைப்பதை தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு வலிவடக்கு ஊறணி, தையிட்டி, மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் கையேழுத்திட்டு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்கள்.
மதுபானசாலை அமைப்பதனை தடுத்து நிறுத்தல் தொடர்பாக ஊரணி, தையிட்டி, மயிலிட்டி ஆகிய கிராமங்கள் உள்ளடங்கிய பகுதியில் புதிதாக மதுபானசாலை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இம் மதுபானசாலை எமது கிராமத்தில் அமையப்பெறுவதனை கிராம மக்களாகிய எதிர்ப்பினை வெளிப்படுத்தி காரணங்களை உங்களுக்கு அறியத் தருகிறோம் என அந்தக்கடிதத்தில் தெரிவித்துள்ளன,.நீண்ட போருக்குப் பின்னர் எமது பிள்ளைகளை கல்வியில் முன்னேற்றி எதிர்கால இளைஞர் சமுதாயத்தை வளம் மிக்கவர்களாக கட்டியெழுப்புவதற்கு பெரிதும் துன்பப்பட்டு வருகின்றோம்.
வளர்ந்து வரும் இச்சமுதாயத்தில் தற்பொழுது போதைப்பொருள் பாவனையில் பல குடும்பங்களில் இளைஞர் யுவதிகள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு வருங்கால சமூகம் சீரழிந்து வருவதனை காணக்கூடியதாக இருக்கின்றது.இவ்வாறான சூழ்நிலையில் எமது கிராமத்தில் இவ்வாறான துஸ்பிரயோகங்கள் தோன்றாது இருக்க வேண்டும் என்பதில் நாம் பெரிதும் அக்கறையாக உள்ளோம் எனக் குறிப்பிட்டனர்.
பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இளம் பெண் பிள்ளைகள் கடற்தொழில் மேற்கொள்ளும் குடும்பங்களை சார்ந்தவர்கள் பாதிக்கபடகூடிய நிலையும் குடும்ப வன்முறைகள் கலாசார சீரழிவுகள் ஏற்படகூடிய சூழல் உருவாகுகிறது.இதனால் இம்மதுபானசாலையினை எமது பிரதேசத்தில் அமைப்பதனை தடுத்து நிறுத்தியுதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளனர். இதன் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நீதிபதி நீதவான நீதிமன்றம் மல்லாகம், பிரதேச செயலாளர் வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை செயலாளர், பிரதேச சபை வலிகாமம் தெல்லிப்பளை, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காங்குசன்துறை, மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.