சீனாவுக்கு முன்னதாக கொழும்பை கட்டுக்குள் கொண்டுவர முற்படும் இந்தியா : ஜெய்சங்கரின் இலங்கைக்கான அவசரப் பயணம்.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை மறுதினம் 4ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பயணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புகளை நடத்த உள்ளார். அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு கடந்த காலத்தைவிட குறிப்பிடத்தக்களவு மேம்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
என்றாலும், தேசிய மக்கள் சக்தியை அல்லது அநுரகுமார திஸாநாயக்கவை சீனா பக்கம் செல்லவிடாது முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் புதுடில்லி ஈடுபட்டுள்ளது.
அதற்கான முதல்கட்ட நகர்வாகவே எஸ்.ஜெய்சங்கரின் இந்த உடனடி பயணம் இடம்பெறுகிறதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிராந்தியத்தில் சிறிய நாடாயினும் இலங்கையின் பூகோள அமைவிடம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் கடல் போக்குவரத்தில் முக்கிய தாக்கத்தை செலுத்துகிறது. அதன் காரணமாகவே தமிழ் மக்களின் அரசியல் நகர்வுகளை தீர்மானிக்கும் சக்தியாகவும் இருக்க இந்தியா விரும்புகிறது. அதன் ஊடாக இலங்கையுடன் தொடர்ந்து பேச்சுகளில் ஈடுபட முடியும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு.அதேபோன்று சீனாவை காட்டிலும் முதலீகளை இலங்கையில் மேற்கொள்வதன் ஊடாக ஆளும் அரசாங்கங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என இந்தியா கருதுகிறது.
இந்த நிலையில், அநுரகுமார தமது வெளிநாட்டு கொள்கைகளை தீர்மானிக்க முன்னர், இந்தியாவின் நலன்கள் தொடர்பில் கடுமையான அக்கறையை செலுத்த வேண்டுமென்ற செய்தியை தெளிவுபடுத்தவே, ஜெய்சங்கர் அவசரமாக இலங்கைக்கு வருவதாகவும், இலங்கையில் இந்தியாவின் செல்வாக்குதான் இருக்குமென்ற செய்தியை சர்வதேசத்துக்கு தெளிவுப்படுத்தும் ஜெய்சங்கரின் நோக்கமாக இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.