இலங்கைக்கு நிதியுதவி வழங்க கொரியா வங்கி இணக்கம்
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம் இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்த போதே இந்த உடன்பாட்டை வெளியிட்டனர்.
இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில், இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு கொரிய எக்ஸிம் வங்கி வழங்கிய நிதியுதவி 2022-2024 ஆம் ஆண்டுகளில் இடைநிறுத்தப்பட்டது. அந்த அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்கு சலுகைக் கடன் உதவி வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக கொரிய எக்ஸிம் வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளரிடம் தெரிவித்தனர்.
எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார ரீதியில் பயனுள்ள வேலைத்திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு தாங்கள் எதிர்பார்ப்பதாக கொரிய எக்ஸிம் வங்கி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
கொரிய எக்ஸிம் வங்கியின் பணிப்பாளர் வொன்சுக் ஹா, பிரதிப் பணிப்பாளர் ஹனுய் ஹன், திட்ட முகாமையாளர் நளின் ஜயதுங்க ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரொஷான் கமகேயும் இதில் இணைந்து கொண்டார்.