கடந்த 15 ஆண்டு காலமாக மக்களை வழிநடத்திய தமிழ்த் தலைவர்கள் மக்களை எங்கே அழைத்துச் சென்றனர்

- காவியா -

தமிழர்களிடையே ஒற்றுமையாக நின்று சுழற்சியான வகையில் நாடாளுமன்ற கதிரையை பற்றிச் சிந்திக்க வேண்டும். ஏதோ ஒரு கட்சியின் சின்னத்தின் கீழ் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட தயாராக வேண்டும்.

எமது கட்சி பெரிது, உமது கட்சி பெரிது என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு தமிழர்கள் நாங்கள் நிச்சயமாக ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணத்துடன் தேர்தலை சந்திக்க வேண்டும்.

கொழும்புத் தலைகள் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட வேண்டும்.

தோல்வியை நோக்கி மக்களை வழிநடத்தியவர்கள் விரட்டப்பட வேண்டும்.

சர்வதிகாரம் மிக்க மக்களுக்கு விருப்பமற்ற தமது நலனை கருத்தில் கொண்டு செயற்படும் அரசியல்வாதிகளை தமிழர்கள் முற்று முழுதாக புறக்கணிக்க வேண்டும்.

இரண்டு தடவைக்கு மேல் நாடாளுமன்றத்திற்கு தேர்வான தலைமைகள் விரட்டியடிக்கப்பட வேண்டும்.

ஆறு மாதத்திற்கு மேல் நாடாளுமன்ற கதிரையில் அமராது கூட்டுத் தொடர் தலைமைகள் வேண்டும்.

தமிழ் பொதுச் சபையில் உள்ளவர்கள் அரசியல் கதிரைக்கு ஆசைப்படக் கூடாது. அவ்வாறாக ஆசைப்படுபவர்கள் விரட்டி அடிக்கப்பட வேண்டும்.

50வீதம் பெண்கள் நாடாளுமன்றத்திற்கு பெயர்கள் முன்மொழியப்பட வேண்டும்.

மொழியறிவு வேண்டும் என்பதனை விடுத்து தமிழ் மக்களுக்கு நல்ல வாழ்வியலை ஏற்படுத்திடத்தக்க ஊழலற்ற தலைவர்கள் வேண்டும்.

தமது நாடாளுமன்ற ஊதியத்தில் ஆகக் குறைந்தது 10வீதத்தை மக்களுக்கு ஒதுக்க வேண்டும்.

தமது அளவிற்கு அதிகமான சொத்தை/நாடாளுமன்ற உறுப்பினராக வந்த பின்னர் உழைத்து வாங்கிய சொத்துக்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். (பினாமிச் சொத்துக்கள் உள்ளடங்கலாக)

தமது அதிகாரத்தை பயன்படுத்தி, தமது பதவியைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களிடம் இருந்து உழைத்த, புலம்பெயர்ந்த நாடுகளில் வாங்கப்பட்ட சொத்துக்கள் இலங்கையில் வாழும் மக்களுக்கு அபிவிருத்திக்காக வழங்கப்பட வேண்டும்.

கடந்த 15 ஆண்டு காலமாக மக்களை வழிநடத்திய தமிழ்த் தலைவர்கள் மக்களை எங்கே அழைத்துச் சென்றனர் என நாம் ஒவ்வொருவரும் யதார்த்தமாக சிந்திக்க வேண்டும். இந்தத் தலைவர்கள் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கோ, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கோ அல்லது புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வந்த போராளிகளுக்கோ எந்தவித ஆரோக்கியமான வாழ்வியல் நலத் திட்டங்களையும் ஒருங்கிணைந்த முகாமைத்திட்டத்தின் கீழ் முன்னெடுத்துச் செல்லவில்லை. மாறாக போராளிகளை சிங்கள இராணுவத்தின் புலனாய்வுத் துறையினருக்கு காட்டிக் கொடுப்போம் என பல்வேறுபட்ட அச்சுறுத்தலை வழங்கி போராடிய போராளிகளை ஒடுக்கி அழிக்கும் செயலையே செவ்வனச் செய்தனர். அல்லது தமது அடிமைகளாக தமது ஏவலைச் செய்யும் ஆள்களாக மாற்றவே முற்பட்டனர். அன்று மக்களுக்காக போராடிய இளையோர்கள் பலரும் தமது இளமைக்காலத்தை தொலைத்து மக்களுக்காக போராடியதை மாபெரும் குற்றமாக இலங்கைவாழ் மக்களுக்கு ஏற்படுத்தி அந்தப் போராளிகளை சமூகத்தில் இருந்து விலக்கி வைத்தனர். இதனால் சில போராளிகள் திசைமாறிய பறவைகளாக மாறவும் காரணமானது.
இன்றைய இளைய சமூகத்தினர் இலங்கையில் தமிழ்மக்களுக்கு நடந்த இனப்படுகொலை பற்றிய புரிதலின்றிய ஒரு சமூகத்தை கடந்த 15 ஆண்டுகால இலங்கைத் தமிழ் தலைவர்கள் கட்டியெழுப்பி தமது அரசியலை அரங்கேற்றினார்கள்.

இன்றைய சூழலில் இலங்கையை ஆளும் சனாதிபதியும் ஒரு போராளியாக முன்னொரு காலத்தில் இருந்தவரே. அவர்கள் தமது சகாக்களையும் சமூகத்தையும், போராளிகளையும் பாதுகாக்க ஆட்சியாளர்களுடன் கூட்டணைந்து தாமும் வளர்ந்து தமது அன்றைய போராளிகளையும் வளர்த்தனர். மாறாக தமிழ் அரசியல் தலைமைகளோ தாம் போராளிகளின் பெயரை சொல்லி தமது சொந்த நலனை வளர்த்துக் கொண்டது மட்டுமன்றி, புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் மக்களிடையேயும் பிரிவினைகளை ஏற்படுத்தினர். புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் மக்களும் போலியாக கட்டப்பட்ட தூய தமிழ்த்தேசியவாதிகள் என அடையாளப்படுத்தப்பட்ட கஜேந்திரகுமார் அணி எனவும், TNA அணி எனவும் பிரிந்தார்கள்.TNA அணியில் சட்டத்தரணிகள் அணிகளுக்குள்ளும் முரண்களை உருவாக்கி மக்களை பல வகையில் பிரிந்தனர்.மக்களுக்கு தமிழ்த் தலைமைகள் மீதான நம்பிக்கைகளை சிதைத்தனர்.

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கிடையே ஏற்பட்ட சமூக கலாச்சார சீரழிவை தடுத்து நிறுத்த தவறிய தமிழ்ச் சட்டத்தரணிகள் ஊழல், இலஞ்சம், போதைப்பொருள் கடத்தல் இவற்றிற்கும் வழக்காட சென்று தமிழ் சமூகத்தை மேலும் மேலும் சீரழித்தனர். இந்தச் சமூகச் சீர்கேடுகளால் தமிழ் மக்களிடையே ஊழல், இலஞ்சம், பாலியல் குற்றங்கள், சமூகச் சீர்கேடுகள், ஒழுக்கப் பிறழ்வுகள், கேளிக்கைகள் என பல்வேறு சீரழிவை தமிழ் சமூகம் சந்தித்தது. இதனை இலங்கையில் இருந்த அறிவியல் சமூகத்தில் பெரும்பாலானவர்களும் கட்டுப்படுத்த தவறியதுடன் புலம்பெயர்ந்து செல்ல தலைப்பட்டனர்.

இத்துடன் தென்னிலங்கையில் இருந்து வந்தவர்களின் ஆக்கிரமிப்பும் அவர்களின் கலாச்சாரமும், புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து வந்தவர்களின் கட்டுப்பாட்டற்ற செயல்களும் தமிழ்ச் சமூகத்தை மேலும் மேலும் சிதைவை நோக்கி நகர்த்தியது. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த தவறிய தமிழ்த் தலைமைகள் தாம் தம்மை வளர்த்தெடுக்கவும், தமது அரசியல் இலாபத்தை அடையவும் சிங்கள அரசியல்வாதிகளுடன் ஒத்தோடி தமது நலனிற்காக பாடசாலைகளுக்கு அருகிலும், மக்கள் அதிகளவு கூடும், இளையோர்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும் மதுபானச் சாலைகளை ஆரம்பித்தனர்.

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அந்த மக்களுக்கான உளவியலைப் பற்றிய கரிசனையை கருத்தில் கொண்டு செயற்பட தமிழ் அரசியல்வாதிகள் தவறினர்.