2024 நாடாளுமன்றத் தேர்தலும் வடகிழக்குத் தமிழ்க் கட்சிகளும் மக்களும்!

செ. அன்புராசா

ஆட்சியில் ‘மாற்றம் வேண்டும்’ என்ற நம் நாட்டு மக்களின் எண்ணமும் விருப்பமும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மதிப்புக்குரிய அநுரகுமார திசாநாயக்க அவர்களை ஜனாதிபதியாக ஆக்கியிருக்கிறது.
இதற்கு வடகிழக்கு மாகாண மக்களைவிட தென்பகுதி மக்கள் தமது ஆதரவைக் கொடுத்து அநுரகுமாரவை ஆட்சிப்பீடம் ஏற்றி இருக்கின்றார்கள்.
இதில் வடகிழக்கு மக்கள் தமது பங்களிப்பை வழங்கியிருந்தாலும் வடகிழக்குத் தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகளின், குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழிநடத்தல்கள் இன்னும் அதிகமாக அநுரகுமாரவுக்கு வடகிழக்கில் கிடைக்கவேண்டிய வாக்குவீதத்தைக் குறைத்திருக்கின்றது.
எனினும், எனது பார்வையில், இக்காலகட்டத்தில் வடகிழக்குத் தமிழ் முஸ்லிம் மக்கள் முதன்முதலாக இத்தனை வாக்குகளை தற்போதைய ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கி அவர் தெரிவாவதற்கு ஆதர தெரிவித்திருப்பது வடகிழக்கு மக்களும் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்திருந்தார்கள் என்பதையே வெளிப்படுத்துகின்றது.
உண்மையில், தென்பகுதி மக்களின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது என்பதை 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் கட்டியம் கூறி நிற்கின்றது.
நிற்க, இக்கட்டத்தில் தமிழ் மக்கள் மிகவும் அறிவுத் தெளிவோடு செயற்படவேண்டிய நேரம் இதுவாகும்.
ஏனெனில், கடந்த காலங்களிலே அடுத்தடுத்து வந்த ஏறக்குறைய மூன்று ஜனாதிபதித் தேர்தல்களில் மிகப் பிழையான தெரிவுகளையே அநேகமாகப் பெரும்பாலான முக்கிய தமிழ்க் கட்சிகள் மேற்கொண்டு மக்களின் வாக்குகளை வீணாக்கின. இதுதான் இந்த ஆண்டும் நிகழ்ந்திருக்கின்றது.
அடுத்து, எமது தமிழ்க் கட்சிகள் பிரிந்து பிரிந்து சின்னாபின்னப் பட்டுப்போய்க் கிடக்கின்றன. தென்பகுதியைப்போல் எமது மக்களும் எமது நாடாளுமன்ற பழைய தலைமுறையினரோடு களைத்துப்போய் விட்டார்கள். எனவே அவர்களும் ஒரு புதிய தலைமுறையினரை தமது பிரதிநிதிகளாக எதிர்பார்க்கின்றார்கள்.
அந்தவகையில் காலங்காலமாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய இளந்தலைவர்களுக்கு இடம்கொடுத்து வழிவிடவேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் மக்கள் புதியவர்களைத் தெரிவார்கள் என்பதை இம்முறை அவதானிக்கலாம்.
இதற்கிடையில் என்னதான் நடந்தாலும் வழமையாகப் போட்டியிடும் ஒருசில தமிழ்க் கட்சிகளும் சில சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் குதிக்கப்போவது நிச்சயம். அப்படிச் சிறுசிறு குழுக்களாய் நிற்பதால் எவ்வித பலனும் ஏற்படப்போவதில்லை என்பதுடன் அம்முயற்சி ஒரு மக்கள் குழுமாக நம்மை மேலும் பலவீனப்படுத்தும்.
மேலும், ஜனாதிபதி அவர்கள் சார்ந்திருக்கும் கட்சி வடகிழக்கில் தனித்து போட்டியிடப் போகின்றது. அப்படி போட்டியிட்டு குறிப்பிடத்தக்க ஆசனங்களைப் பெற்றால் எமது மக்களின் பிரதிநிதித்துவம் ஒரு தேசிய இனக்குழுமம் சார்ந்த குரலாக ஓங்கி ஒலிப்பது மட்டுப்படுத்தப்பட்ட அல்லது இல்லாமல் செய்யப்படும் நிலைமையே ஏற்படும் ஆபத்து இருக்கிறது.
ஆனால், வடகிழக்குத் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் ஒன்றுபட்டு நின்று தமது பிரதிநிதிகளை புதிய ஜனாதிபதியின் ஆக்கபூர்வமான திட்டங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் தமது முழுமையான ஆதரவை வழங்கச் செய்யமுடியும்.
ஆகவேதான் தமிழ்மக்களின் ஒரு கூட்டுச் செயலணி (தமிழ்மக்கள் பொதுக்கட்டமைப்பு) உருவாக்கப்பட்டு அதனூடாக நாடாளுமன்ற வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதும் அவர்களை வெற்றிபெறச் செய்வதும் தற்போது தமிழ் மக்களின் தலையான கடமையாகவும் பொறுப்பாகவும் இருக்கப் போகின்றது.
நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள்: பழைய, அறளை பெயர்ந்துபோன, படித்தும் ஞானமில்லாத தலைமுறையை ஓய்வெடுக்க விட்டுவிட்டு, கொஞ்சம் படித்த, பண்புள்ள, மக்களின் நோவுகளை உணரக்கூடிய, மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய, மதுசாலைகளுக்கு அனுமதி வாங்காத, மண்விற்று பிளைப்புத் தேடாத, பிதற்றித் திரியாத, மக்கள்மைய பிரதிநிதிகளை நாடாளுமன்றம் அனுப்புவது இன்றியமையாதது. மேலும், தமிழரசுக் கட்சியும் இளைய தலைமுறையினரை உள்வாங்கி மேற்கூறப்பட்ட கூட்டுச் செயலணியில் இணைந்து கொள்ள வேண்டும் என்பதுதான் பொதுவான மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தமிழரசுக் கட்சியின் தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதிகள் தங்கள் சுகபோகங்களையும் பிடிவாதங்களையும் களைந்து தமது மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க இனியாவது முன்வரவேண்டும். இல்லையென்று தனிவழி சென்றால் அது மிகப்பெரும் வரலாறு சந்திக்காத பாரதூரமான பின்னடைவைச் சந்திப்பதோடு தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பலத்தையும் பாதிப்படையச் செய்யும்! இணைவார்களா? ஒன்றாக நிற்பார்களா? இளந்தலைமுறையினருக்கு இடம்கொடுப்பார்களா?