வார்த்தை தவறிய பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர்
தங்கள் வசம் உள்ள இஸ்ரேல் நாட்டு பிணைக் கைதிகளை ஹமாஸ் உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் வலியுறுத்தியுள்ளார். ஆனால், இதை அவர் சொன்னபோது வார்த்தை தவறி ‘Return of Sausages” என சொல்லி, பின்னர் அவரே அதை திருத்திச் சொன்னது இணையவெளியில் கவனம் பெற்றுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான மோதல் காரணமாக கடந்த ஒரு வருடமாக பாலஸ்தீனம் யுத்தக் களமாக காட்சி அளிக்கிறது. இப்போது இஸ்ரேல் தரப்பு லெபனானிலும் ஹிஸ்புல்லாவை தாக்கி வருகிறது. இந்தத் தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 569 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் சூழல் குறித்து பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் பேசியுள்ளார். தனது கட்சியின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், ‘காசாவில் போரை நிறுத்த வேண்டும். ஹமாஸ் வசம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்.’ என்றார். அப்போது ஆங்கிலத்தில்Hostages என்பதற்கு பதிலாக Sausagesஎன ஸ்டார்மெர் பேசினார். உடனடியாக வார்த்தை தவறியதை அறிந்து அதை மாற்றிக் கொண்டார் – அதுதான் இப்போது உலக அளவில் கவனம் பெற்று வருகிறது.
தொடர்ந்து பேசிய அவர் ‘பாதுகாப்பான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் அவசியம். அதை இரு தரப்பும் உறுதி செய்ய வேண்டும். அதே போல லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் நிலவும் மோதல் போக்கினை அந்தந்த நாடுகள் கைவிட வேண்டும்’ எனத் தெரிவித்தார். பிரிட்டனில் கடந்த ஜூலை மாதம் 14 ஆண்டுகால கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சிக்கு முடிவுரை எழுதியது லேபர் கட்சி. தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்ற பின்னர் பிரதமராக ஸ்டார்மெர் பொறுப்பேற்றார். அவரது தலைமையிலான ஆட்சி அமைந்ததும் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் கைவிடப்பட வேண்டும் என பிரிட்டன் அரசு வலியுறுத்தி வருகிறது. இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், பலஸ்தீன மக்களுக்கு தேவைப்படும் உதவிகளையும் பிரிட்டன் அரசு செய்து வருகிறது.