முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய அரச குடியிருப்புக்களை மீள ஒப்படைக்குமாறு அறிவிப்பு.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பயன்படுத்திய அனைத்து அரச குடியிருப்புகள் மற்றும் விடுதிகளை மீள ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு பொது நிர்வாக அமைச்சானது எழுத்து மூலம் இதனை அறிவித்துள்ளது.
15 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஏற்கனவே அரச குடியிருப்புகள் மற்றும் விடுதிகளை ஒப்படைப்பது குறித்து விசாரணை நடத்தியதாக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பல நிறுவனங்களுக்குக் கொழும்பில் சுமார் 50 அரச விடுதிகள் வழங்கப்பட்டிருந்தன.
இதேவேளை, பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி வரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிவெலையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புகளை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், குறித்த குடியிருப்புக்களை பொதுத் தேர்தல் நடைபெறும் தினத்திலோ அல்லது அதற்கு மறுநாளோ ஒப்படைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரம், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முத்திரை கட்டணம் உள்ளிட்ட அனைத்து வகையான கொடுப்பனவுகளும், வசதிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.