இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது
புத்தரின் போதனையை நிலை நிறுத்துங்கள்
ஜனாதிபதிக்கு தமிழர் பகுதியிலிருந்து அவசர கடிதம்
இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இந்த நாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. பகைமையை பகைமையால் தணிக்க முடியாது. பகைமையை அன்பால் தணிக்க முடியும் என்னும் புத்தரின் போதனையை நிலை நிறுத்துங்கள் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்விடயம் குறித்து தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்று (25) ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
இடது சாரித்துவ சிந்தனையின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கத்தின் சமூக சமநீதி கோட்பாட்டின் அடிப்படை யை நோக்கு நிலையாகக் கொண்டு உருவாக்கிய கட்சி இடைக்காலத்தில் இனவாத சகதிக்குள் சிக்குண்டு பௌத்த தேசிய அடிப்படைவாத மகா வம்ச கருத்தியலை நடை முறையாக்க முனைந்ததே.
இனத்துவ சமூக கட்டமைப்புக்குள் விரிசலை ஏற்படுத்தியது. மதவாதம், இனவாதம் தேசியவாதத்திற்கு எதிரானது தேசியவாதம் என்பது தேசிய இனங்களின் சுயநிர்ணய சமத்துவ இருப்பியலை கேள்விக்கு உட் படுத்தாது. சமநீதிக்குட்பட்டதே இடதுசாரி கோட்பாடு இதை நடைமுறைப்படுத்த வேண்டும். என்பதே நீதி மறுக்கப்பட்டவர்களின் அற நிலை எதிர்பார்ப்பு ஆகும்.
துப்பாக்கி முனையில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது எனும் மாக்சிச கோட்பாட்டிற்கு ஆகப் பிந்திய உதாரணம் தாங்கள் ஏழு தசாப்தம் கடந்த இன முரண்பாட்டிற்கு தங்கள் காலத்தில் என்றாலும் தீர்வு காணப்படுவது அவசியம். அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட உரிமை மறுக்கப்பட்ட இனத்தின் ஏதிலி நிலையின் வலி என்ன என்பதை தாங்களும் உணர்ந்தவர் என்பதால் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றோம்.
இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இந்த நாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. பகைமையை பகைமையால் தணிக்க முடியாது. பகைமையை அன்பால் தணிக்க முடியும் என்னும் புத்தரின் போதனையை நிலை நிறுத்துங்கள். எவருக்கும் தீங்கற்ற பஞ்சசீல தம்மபதக் கொள்கை வழியை நடைமுறைப் படுத்தினாலேயே இந்த நாட்டில் சமத்துவம் ஏற்படும் நீர்த்துப்போன சனநாயகத்தில் வெற்று வாதங்களால் தான் முரண் நகை நீள்கிறது. அது கசப்புணர்வாக மாறி இனங்களுக்கு இடையே பசப்புக் கொள்கிறது.
தமிழர்கள் நல்லிணக்கத்தையே விரும்புகிறோம். அடிப்படை வாழ்வுரிமை இருப்பில் பங்கம் நேருவதால் தான் மனக்கிலேசம் ஏற்படுகிறது. சிங்கள மக்களை நாங்கள் எதிர்க்கவில்லை. அவர்கள் எமக்கு எதிரிகளும் இல்லை. சிங்கள அரசியல்வாதிகளின் தவறான மேட்டிமை வாத அடிமைத்துவ சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் இனத்துவ அடக்கு முறையை யே நாம் எதிர்க்கிறோம்.
எமது நீதி பூர்வமான கோரிக்கையை இதுவரை எந்த ஆட்சியாளரும் புரிந்து கொண்டதாக வரலாறு இல்லை என்பதே வேதனைக்குரிய கசப்பான உண்மை. ஆகவே பாதிக்கப்பட்ட தரப்புடன் இதயசுத்தியாக மனம் திறந்து பூச்சிய நிலையில் இருந்து பேசுங்கள் நீதி என்பது பாதிக்கப்பட்டவனின் பக்கம் நிற்பதே முதலாளித்துவ அதிகார வர்க்கத்துக்கு எதிரான பொதுவுடமை சித் தாந்தத்தை அடிப்படையாக கொண்ட தாங்கள் அடிப்படைவாத இனவாதத்தை முழுமையாக துறந்து விட வேண்டும்.
கடந்த காலத்தில் தங்களின் இனவாத இனக்குரோத வன்முறை வாத செயற்பாடுகளால் தமிழ் மக்கள் தங்கள் மீது அச்சத்திலும் வெறுப்பிலும் உள்ளனர். அதனால் தான் தமிழர் தாயகம் எங்கும் தங்களுக்கான ஆதரவு கிட்டவில்லை இதுதான் ராஜபக்ச குடும்பத்திற்கு நேர்ந்தது.
எனவே, கடந்த கால கசப்புணர்வுகளுக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருங்கள். உலகத்தில் ஜனநாயகம் பெரு வளர்ச்சி அடைந்து விட்டது ஜப்பான் ஹிரோஷிமா நகர தாக்குதலுக்காக அமெரிக்கா வருந்துகிறது.
ஜனாதிபதியே மரியாதை செலுத்தும் அளவுக்கு தவறை உணர்ந்து விட்டனர். 1983ம் ஆண்டு இனக் கலவரத்திற்காகவும் கொரோனா காலத்தில் முஸ்லிம்களின் உடலை எரித்தமைக்காகவும் அண்மையில் நீதி அமைச்சர் மன்னிப்பு கோரி இருந்தார்.
தங்கள் கட்சியை கூட சிங்கள மக்கள் மன்னித்ததால் தான் நீங்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர முடிந்திருக்கிறது. உங்கள் கடந்த காலத்தையும் நீங்கள் மீள்பார்வை செய்வது இன நல்லிணக்கத்திற்கு அவசியமாகும். அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த எந்த எல்லைக்கும் போகலாம். இதுதான் ஜனநாயகத்தின் உயர்ந்த நிலை எனவே வாக்களிக்காதவருக்கும் வாய்ப்பளித்து வெற்றி கொள்வதே ஜனநாயக மரபியல் தத்துவமாகும் அதை நடைமுறைப் படுத்துவீர்கள் என நம்புகின்றோம். எதிர்பார்க்கின்றோம்.
நவீன இலங்கையை உருவாக்க முற்போக்கு சிந்தனையுடன் நகருங்கள் முறைமை மாற்றத்தை ஏற்படுத்துங்கள், புதிய அரசியலமைப்பை உருவாக்கங்கள், விவசாய, கடற்றொழில் புரட்சியை ஏற்படுத்துங்கள். கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள். தற்போதைய அரசு இயந்திரம் முழுமையான ஊழலுக்குள் சிக்கித் தவிக்கிறது. தயவு தாட்சண்யமின்றி ஊழல்வாதிகளுக்கு நடவடிக்கை எடுங்கள். போதைப்பொருளை முற்றாக ஒழியுங்கள், வினைத்திறனற்ற பல இலட்சம் அரச ஊழியர்களை அகற்றுங்கள் ,காவல் துறையை முழுமையாக மறுசீர் அமையுங்கள்.
உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுங்கள். வருமானத்தை மீறி சொத்து சேர்ந்தவர்களுக்கு நடவடிக்கை எடுங்கள். சொத்துக்களை அரசுடமை யாக்குங்கள் அரசின் அர்த்தமற்ற செலவினங்களை குறையுங்கள். வருமான வரி திணைக்களத்தை வினைத்திறனுடன் இயங்க நடவடிக்கை எடுங்கள் ஊழலை கட்டுப்படுத்த வலிமையான சட்டமும் கடுமையான தண்டனையும் வழங்க வேண்டும்.
தற்போது நாட்டில் உள்ள ஊழல்வாதிகளை கைது செய்தால் புதிதாக சிறைச்சாலைகளை அமைக்க வேண்டி வரலாம். அவ்வளவு ஊழல்வாதிகள் உள்ளனர். ஊழல் இல்லாத திணைக்களம் இந்த நாட்டில் இல்லை கடந்த காலத்தில் அரசியல் சூதாட்டத்திலும் ஊழலிலும் ஈடுபட்ட எந்த அரசியல்வாதிகளையும் உங்கள் அரசில் சேர்த்துக் கொள்ளாதீர்கள.
எமது சித்தாந்தம் கடந்து இவ்விதமான சீர்திருத்த முறைமை மாற்றத்திற்காக உங்கள் தெரிவை வரவேற்கிறோம்… வாழ்த்துகிறோம்.
மனித சிந்தனை தோற்றுவித்திருக்கும் யாவற்றையும் மறு பரிசீலனை செய் விமர்சனத்துக்கு உட்படுத்து மாற்றி அமை செயல்படு எனும் மாக்ஸ்சிச சித்தாந்தத்தை நடைமுறைபடுத்துங்கள்.
மதச்சார்பற்ற தேசத்தை உருவாக்கி சமூக நீதியை நிலைநாட்டுங்கள். வடகிழக்கிலுள்ள அத்தியாவசிய நிரந்தர பிரச்சனையில் பௌத்த தேசியவாதம் கடந்து அவர்களும் மனிதர்கள் அவர்களுக்கும் உணர்திறனும் வாழ்வியல் உரிமையும் உண்டு என்பதை உணர்ந்து உளத்தூய்மையுடன் செயலாற்றுங்கள் வரலாறு உங்களை பதிவு செய்யும் இல்லையேல் காலம் உங்களை காலாவதியாக்கி விடும் என்பது தங்களுக்கு புரியாமல் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.