கடவுளாக சித்தரிக்கப்பட்ட பிரதமர் மோடி: பா.ஜ. பிரமுகர் பூஜை செய்த வீடியோ வைரல்

பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று  விஸ்வகர்மா ஜெயந்தியும் கொண்டாடப்படுவதால், பா.ஜ., பிரமுகர் ஒருவர் அவரின் படத்தை விஸ்வகர்மாவாக சித்தரித்து பூஜை மற்றும் பால் அபிஷேகம் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு 74வது பிறந்தநாள்.

அதனை முன்னிட்டு நாடு முழுவதும் பா.ஜ. தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பல அரசியல் தலைவர்களும் மோடிக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர். சில கோயில்களில் பா.ஜ.இ தொண்டர்கள் மோடி பெயரில் சிறப்பு பூஜையும் செய்தனர்.இதேநாளில் விஸ்வகர்மா ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது.

விஸ்வகர்மா ஜெயந்தி, ஒவ்வொரு ஆண்டும் கன்யா சங்கராந்தி என்று அழைக்கப்படும் புரட்டாசி மாத பிறப்பன்று கொண்டாடப்படும். இன்றை தினத்தில் கடவுள் விஸ்வகர்மாவுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில், பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள வேத பாடசாலையில் பா.ஜ., பிரமுகர் ஒருவர், பிரதமர் மோடியின் படத்தை விஸ்வகர்மாவாக சித்தரித்து பூஜை மற்றும் பால் அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளார். பிரதமர் மோடியை கடவுளாக சித்தரித்து அபிஷேகம் செய்த இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து அந்த பா.ஜ., பிரமுகர் கூறுகையில், ”நவீன இந்தியாவின் விஸ்வகர்மா பிரதமர் மோடி தான். அவர் நம் நாட்டை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியுள்ளார்” என்றார்.