அநுரவுடன் விவாதத்திற்கு நான் தயார்: ஆனால் அழைக்கவில்லை: ரணில் விடுத்த சவால்


அரசாங்கம் ஏற்கனவே அமுல்படுத்திய வேலைத்திட்டத்திற்கே சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு என தெரிவித்த ஜனாதிபதி, மக்கள் முன் வந்து பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் சஜித்துக்கோ அல்லது அநுரவுக்கோ நாட்டை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பிற்பகல் வெல்லவாயயில் நடைபெற்ற ‘ரணிலால் முடியும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் விவசாய அமைச்சர் அநுர குமார என்னை விவாதத்திற்கு அழைத்தார். நான் அதற்கு தயார் என்று அறிவித்துள்ளேன்.

ஆனால் இன்னும் அழைப்பு வரவில்லை. இன்றும் நான் அதற்கு தயாராக இருக்கிறேன். அவர்களால் ஏன் விவாதத்திற்கு வர முடியாது? அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை என்பதாலே பின்வாங்குகின்றனர். அனைத்தையும் இலவசமாக கொடுப்பது பற்றித் தான் சஜித் பேசுகிறார். தலை வலியையும் அவர் இலவசமாக கொடுப்பார். ஆனால் நாம் கடினமாக பெற்ற வெற்றியைப் பாதுகாத்து முன்னேற வேண்டும். இதற்காக செப்டம்பர் 21ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்காக அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..