நேட்டோவுடன் போர் ஏற்படலாம்:  மேற்கு நாடுகளுக்கு விளாடிமிர் புடின் எச்சரிக்கை

ரஷ்ய இலக்குகளைத் தாக்குவதற்கு நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்துவதற்கு மேற்கு நாடுகள் அனுமதிப்பது தனது நாட்டிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான போரைக் குறிக்கும் என்று விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.

ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது தொடர்பில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய அமைச்சர்களுக்கும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து புட்டினின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் போரின் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போதே மேற்படி கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் மோதலின் தன்மையை கணக்கில் எடுத்துக்கொண்டு, நாங்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களின் அடிப்படையில் பொருத்தமான முடிவுகளை எடுப்போம் எனக் கூறியுள்ளார்.

ஜெலன்ஸ்கி பலமுறை மேற்கு நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து போருக்கு உதவுவதற்காக அதிக ஆயுதங்களை வழங்குமாறு மேலும் வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் மேற்கு நாடுகள் ஆயுதங்களை வழங்குவது நேட்டோ போரில் ஈடுவதற்கான சாத்தியத்தை உருவாக்குவதாக புட்டின் கூறியுள்ளார்.