போராட்டத்தை நிறுத்தமாட்டோம்: கொல்கத்தா மருத்துவர்கள் திட்டவட்டம்.!


உச்சநீதிமன்றம் விடுத்த காலக்கெடு இன்று மாலையுடன் முடிவடைந்தும், கொல்கத்தா மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறாமல் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். ஆர்.ஜி கர் மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் 31 வயதான பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சஞ்சய் ராய் எனும் தன்னார்வலர் மட்டுமே கைது செய்யப்பட்டுளளார்.

மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் இந்த வழக்கின் விசாரணை வளையத்தில் உள்ளார். இவ்வழக்கில் இன்னும் குற்றவாளிகள் உறுதிசெய்யப்படவில்லை.
பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டும், மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தியும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பெயரில் மேற்கு வங்கத்தை தவிர மற்ற மாநிலங்களில் மருத்துவர்கள் போராட்டம் சற்று தணிந்தது. ஆனால், மேற்கு வங்கத்தில் குறிப்பாக கொல்கத்தாவில் மருத்துவர்கள் போராட்டம் தற்போது வரையில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதுகுறித்து முன்னதாக கருத்து தெரிவித்திருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, நேற்று மாலை 5 மணியுடன் மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு தங்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என கூறியிருந்தது.

மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தது. மேலும், மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.உச்சநீதிமன்ற அறிவுறுத்தல் குறித்து போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் குழுவினர் கூறுகையில், பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு நீதிவேண்டும், மற்ற மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அந்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றம் செய்யப்படவில்லை என கூறி உச்சநீதிமன்ற காலக்கெடுவை தாண்டி தங்கள் போராட்டத்தை கொல்கத்தா மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவர்கள் போராட்டம் குறித்து நேற்று மேற்கு வங்க அரசு வாதிடுகையில், மருத்துவர்கள் போராட்டத்தால் இதுவரை 23 நோயாளிகள் கொல்கத்தாவில் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிட்டு இருந்தது.பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை விவரங்களை சிபிஐ விசாரணை குழு தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்றைய விசாரணையில் உத்தரவிட்டுள்ளது. நேற்று வரை நடைபெற்ற  விசாரணை நிலை அறிக்கையை சிபிஐ விசாரணை குழுவினர் தாக்கல் செய்திருந்தனர்.