பொருளாதாரக் கொள்கைக்கு பதில் கூறிவிட்டு விவாததற்கு வரட்டும்: அனுரவிற்கு ரணில் பதில்


திசைகாட்டியின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதிப் பொருளாதாரமா அல்லது இறக்குமதிப் பொருளாதாரமா என்று கேட்டதற்குப் பதிலளிக்காத அனுரகுமார திசாநாயக்க தன்னை விவாதத்திற்கு அழைக்கிறார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தன்னுடன் விவாதத்திற்கு வர முன்னர் அநுர, சுனில் ஹந்துன்நெத்தி, ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் தனியாக விவாதம் நடத்தி நாட்டுக்குத் தமது சரியான பொருளாதாரக் கொள்கையை கூற வேண்டும் எனவும் கூறினார்.குருநாகல் அஸ்லியா கோல்டன் கிரசென்டா ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற குருநாகல் மாவட்ட அறிஞர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினருடான கூட்டத்தில் ஜனாதிபதி இதனைக் கூறினார்.

மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு எனக்கு என்ன நடந்தது என இங்கு கேள்வி எழுப்பப்பட்டது. சஜித்துக்கும் அநுரவுக்கும் என்ன நடந்தது என்று நான் கேட்டிருக்க வேண்டும். உணவு, மருந்து, எரிபொருள், எரிவாயு, உரம் இன்றி மக்கள் தவிக்கும்போது சஜித்துக்கும் அநுரவுக்கும் மக்களுக்காக வருத்தமும் வேதனையும் ஏற்படவில்லையா? மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லையா? அவர்கள் அப்படிச் செய்திருந்தால் இன்று நான் இங்கு இருந்திருக்க மாட்டேன்.

அவர்கள் தமது பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றாத காரணத்தினால்தான், ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து நாட்டின் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்க நேர்ந்தது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகும்போது சபாநாயகரை தற்காலிக ஜனாதிபதியாக நியமித்து தேர்தலுக்குச் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும்? அதிகார இடைவெளியை உருவாக்கியிருந்தால் இன்று பங்களாதேஷ் இருக்கும் நிலையில் நாமும் இருக்க வேண்டியிருக்கும்.ஜேவிபி தருவதாக கூறும் நிவாரணங்களை வழங்கினால் செலவு 8,900 கோடி ரூபாயாகவும், வருமானம் 4,900 பில்லியன் ரூபாயாகவும் காணப்படும்.

அத்தோடு வரிக் குறைப்பு தொடர்பிலும் பேசுகின்றனர். அதன்படி வரவு செலவுத் திட்ட இடைவெளி 4000 பில்லியன் ரூபாயாக அமையும். பின்னர் வரவு செலவுத்திட்ட இடைவெளி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.9 சதவீதமாக காணப்படும். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மீறி சந்தையில் பணம் வாங்கினால், வட்டி 25வீதம் ஆக இருக்கும். அதனால் டொலரின் பெறுமதி 500 ரூபாயாக உயர்வடையும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான நிபந்தனைகளை மீறிவிட்டால் அவர்களின் ஆதரவு இரத்தாகும். அதனால் நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கி நகரும். எனவே, அவரின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதி பொருளாதாரமா இறக்குமதி பொருளாதாரமா என்பதை அநுரகுமார திசாநாயக்க எமக்கு முதலில் கூற வேண்டும்.பொருளாதாரத்தை நாசமாக்கி நாட்டை வங்குரோத்து அடையச் செய்யக்கூடிய வரவு செலவு திட்ட யோசனைகளை முன்மொழிந்திருப்பது ஏன் என்று அவர்களிடம் கேட்கிறேன். அதனால் மேடைகளில் கோசமிடுவதை நிறுத்திவிட்டு சரியான பொருளாதார திட்டத்தைத் முன்மொழியுமாறு அறிவுறுத்துகிறேன் எனத் தெரிவித்தார்.