நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு அரசியலில் உள்ள நடிகர்களை இழுக்க முயற்சிகள்


தமிழக பாரதிய ஜனதாவில் நடிகை குஷ்பு, ராதிகா, நமீதா, நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, செந்தில், இசையமைப்பாளர் கங்கை அமரன் என பல திரை பிரலபலங்கள் இருக்கிறார்கள்.இவர்களில் நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மாநில அளவில் கட்சி பணியாற்ற வந்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார்.அதேபோல் கடந்த பாராளுமன்ற தேர்தலில் நடிகை ராதிகா விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார்.அவரும் வெற்றி வாய்ப்பை இழந்தார்.திரை நட்சத்திரங்களிடையே தங்களுக்கு கட்சியில் உரிய பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம் இருப்பதாக கூறப்படுகிறது.இதையறிந்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு அவர்களை இழுக்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.

இதற்காக ரகசிய தூதும் விட்டு வருவதாக கூறப்படுகிறது.ஆனால் இதற்கு இன்னும் சாதகமான பதில்கள் கிடைக்காததால் தொடர்ந்து பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இது தொடர்பாக நடிகை நமீதாவை தொடர்பு கொண்டு கேட்டபோது ,-மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பாரதிய ஜனதாவில் சேர்ந்தேன். கட்சியில் நல்ல மரியாதை கிடைக்கிறது. மிக நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள்.பிரதமர் மோடியின் ஆட்சியில் நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே பாரதிய ஜனதாவில் இருப்பதை பெருமையாக நினைக்கிறேன். எனக்கு வழங்கப்படும் வேலைகளை செய்து வருகிறேன். வேறு எங்கும் செல்லும் எந்த எண்ணமும் இல்லை.இவ்வாறு நமீதா கூறினார்.