உலகையே உலுக்கிய அமெரிக்க  இரட்டைக்கோபுர பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 23 ஆண்டுகள் கடந்துள்ளன.

2001 செப்டம்பர் 11 அன்று காலை சுமார் 8.45 மணிக்கு, அல்கொய்தா பயங்கரவாதிகள் உலக வர்த்தக மையத்தின் மீது விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தினர்.பலரது உயிரை பலிகொண்ட இந்த கொடூர சம்பவத்துக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.2001 செப்டம்பர் 11 அன்று காலை பயங்கரவாதிகள் உலக வர்த்தக மையத்தின் மீதும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் மீது விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் இரு பயணிகள் விமான சேவை நிறுவனங்களான யுனைடட் எயார்லைன்ஸ், அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகளுக்குச் சொந்தமான 4 விமானங்கள் இதன்போது கடத்தப்பட்டு இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் அமெரிக்கன் எயார்லைன்ஸ் இற்கு சொந்தமான ஏஏ11 மற்றும் யுனைடட் எயார்லைன்ஸிற்கு சொந்தமான யுஏ175 ஆகிய விமானங்கள் முறையே, உலக வர்த்தக மையம் அமைந்துள்ள நியூயோர்க் நகரிலுள்ள வடக்கு மற்றும் தெற்கு இரட்டைக் கோபுரங்கள் மீது மோதியதோடு, ஒரு மணித்தியாலங்கள் 42 நிமிடங்களின் பின்னர் தலா 110 மாடிகளைக் கொண்ட அவ்விரு கோபுரங்களும் தரைமட்டமானதோடு அதனைச் சூழவிருந்த 10 இற்கும் மேற்பட்ட கட்டங்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான மூன்றாவது விமானம் ஏஏ77, வேர்ஜினியா மாநிலத்திலுள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு திணைக்களமான பென்டகன் கட்டடத்தின் மீது மோதியதோடு, இதில் அக்கட்டடத்தின் பகுதியளவிலான பாதிப்பை ஏற்படுத்தி கட்டடத்தின் மேற்குப் பகுதியில் சேதத்தை ஏற்படுத்தியது. அதேபோன்று நான்காவது விமானமான, யுனைடட் எயார்லைன்ஸிற்கு சொந்தமான யுஏ93 அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி. நோக்கி செலுத்தப்பட்ட போதிலும்இ பயணிகளால் கடத்தல்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக, பென்சில்வேனியா மாநிலத்திற்கருகிலுள்ள ஸ்டொனிகிறீக் டவுன்சிப் பகுதியில் வீழ்ந்தது. கிட்டத்தட்ட 3,000 பேர் வரை அதில் கொல்லப்பட்டதுடன், வர்த்தக மையத்தின் 110 அடுக்கு இரட்டைக் கோபுரங்கள் தகர்ந்து தரைமட்டமாகின.இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்கா அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு, ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுத்திருந்த தலிபான்கள் மீது போர் தொடுத்தது.

அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார்.இதனையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம்திகதி இரட்டை கோபுரம் இருந்த இடத்தில் மீண்டும் புதிய வர்த்தக மையக் கட்டடமொன்று திறக்கப்பட்டது.அதேசமயம் பென்டகன் மற்றும் சாங்ஸ்வில் பகுதியில் இத் தாக்குதல் தொடர்பான நினைவு மையங்களும் திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.