மலையாள  நடிகைகள்  பாலியல்லழக்கு மீது எதுவித நடவடிக்கையும் எடுக்காத கேரள அரசுக்கு மேல் நீதிமன்றம் கடும் கண்டனம்

மலையாள திரையுலக நடிகைகள் சந்திக்கும் பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சீண்டல்களை விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான விசாரணைக் குழுவொன்றை கேரள அரசு நியமித்திருந்தது. இந்த குழுவின் விசாரணை அறிக்கையில் பல நடிகைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகியிருந்தமை குறித்து தெரிய வந்ததோடு, இதுதொடர்பில் மலையாள திரையுலகைச் சேர்ந்த 11 பேர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், நடிகர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக கேரள மேல் நீதிமன்றம் சிறப்பு அமர்வொன்றை ஒழுங்குப்படுத்தியது.அதன்படி ஹேமா குழுவின் அறிக்கை இந்த அமர்வில் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.அப்போது ஹேமா குழுவின் அறிக்கை மீது எதுவித நடவடிக்கையும் எடுக்காத கேரள அரசுக்கு மேல் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இந்த வழக்கில் புகாரளித்தவர் வழக்கை தொடர விரும்பாதபட்சத்தில் அதனை மதித்து அறிக்கையின் ரகசியத்தன்மை பேணப்பட வேண்டும்.பெருமளவிலான பெண்கள் பிரச்சினைகளை எதிர்கொண்ட போதும் அவற்றை தீர்க்க எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

இவ் விடயத்தில் அரசு ஏன் மௌனம் காக்கிறது? இவ் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்காதது ஆச்சரியமளிக்கிறது. ஒரு குற்றம் நடந்திருந்தால் அதனை விசாரிக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை.குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டதற்கான உண்மை அந்த அறிக்கையில் உள்ளது. ஒருவர் புகாருடன் பொலிஸ் நிலையத்துக்கு வந்தால், நான்கு வருடங்களின் பின்னர்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுமா?’ இவ்வாறு நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.