அமெரிக்க அதிபருக்கு தகுதியான நபர் கமலா ஹாரிசே :முன்னாள் ராணுவ ஜெனரல்கள் தெரிவிப்பு
அமெரிக்க அதிபருக்கு தகுதியான நபர் கமலா ஹாரிசே என்றும், அவர் தான் முக்கியமான தருணங்களில் சரியான முடிவு எடுப்பார் என்றும் டிரம்ப் இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு ஆபத்தானவர் எனவும் முன்னாள் ராணுவ ஜெனரல்கள் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்க தேர்தல் நடக்கவுள்ளது.
இதற்கான பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தற்போது யார் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜனநாயக கட்சியும், குடியரசு கட்சியும் ஆதரவை திரட்டி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க முன்னாள் ராணுவ ஜெனரல் லாரி எல்லீஸ், ரியல் அட்மிரல் மிக்கேல் சுமித் உள்ளிட்ட 10 பேர் ஒன்று சேர்ந்து கமலாவுக்கு ஆதரவு தெரிவித்து எக்ஸ் வலைதளத்தில் கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளனர்.
தற்போதைய அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், டிரம்ப் ஆகிய இருவரில் இந்த தேசத்தின் தலைமை பொறுப்பில் இருந்து பணியாற்றும் தகுதி கமலா ஹாரிஸ்க்கே உள்ளது. அவர் திறம்பட பணியாற்றுவார். மேலும் ரஷ்யா, உக்ரைன் போர், சீன பதட்டம் உள்ளிட்ட பிரச்னையில் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் சரியான முடிவை அவர் எடுத்துள்ளார்.டிரம்ப் இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு ஆபத்தானவர். இவரது ஆட்சியில் எடுத்த முடிவுகள் தோல்வியை தழுவின. இவர் எடுத்த பல்வேறு முடிவுகள் நாட்டிற்கு பின்னடைவை தந்தன. ஆப்கனில் படை குறைப்பில் அவர் எடுத்த முடிவுகள் தவறானது. நமது ராணுவ வீரர்களுக்கு தீங்கிழைத்தார். டிரம்ப் மீண்டும் அதிபராவதற்கு தகுதி அற்றவராகி விட்டார். இவ்வாறு ராணுவ முன்னாள் அதிகாரிகள் தங்களது கடிதத்தில் கூறியுள்ளனர்.