சோலிங்கன் நகரத் திருவிழாவில் கத்தி வெட்டு! மூவர் பலி! தாக்குதலாளி ஓட்டம்

Kumarathasan Karthigesu-பாரிஸ்
 
பாரிஸ், ஓகஸ்ட் 24

ஜேர்மனியின் டுசெல்டோஃவ் (Düsseldorf) மாவட்டத்தில் உள்ள சோலிங்கன் (Solingen) நகரத் திருவிழாவில் நேற்றிரவு நடத்தப்பட்ட கத்தி வெட்டுத் தாக்குதலில் குறைந்தது மூவர் உயிரிழந்துள்ளனர். எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.

திருவிழாச் சனக் கூட்டத்தின் மத்தியில் கத்தியுடன் தோன்றிய நபர் ஒருவர் பலரையும் கண்டபடி வெட்டித் தாக்கியிருக்கிறார். காயங்களுக்குள்ளான பலரும் கழுத்தை இலக்கு வைத்து வெட்டடப்பட்டுள்ளனர் என்றும், தாக்குதலாளி “அரபுத்” தோற்றமுடைய நபர் என்றும் ஜேர்மனியின் Bild செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது.
ஆடிப் பாடிக் கழித்திருந்தவர்களை கொடூரமாக வெட்டிய அந்த நபர் பத்து நிமிட இடைவெளிக்குள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். ஜேர்மனியப் பொலீஸ் கொமாண்டோக்கள் அவரைத் பிடிப்பதற்கான பாரிய தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
தாக்குதலாளியைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று அதிபர் ஒலாப் சோல்ஸ் தெரிவித்திருக்கிறார்.
நகரத்தைச் சுற்றி வீதித் தடைகள் போடப்பட்டுள்ளன. பெரும் எண்ணிக்கையான பொலீஸார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சோலிங்கன் நகரின் 650 ஆவது ஆண்டுத் திருவிழாவில் இடம்பெற்ற இந்த அவலம் நகர மக்களை மாத்திரமன்றி முழு நாட்டையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
சோலிங்கன் நகரில் Fronhof சந்தைப் பகுதியில் மேடையில் பிரபல இசைக்கலைஞர்களது நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தவர்களே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். தாக்குதல் நடந்த சமயம் மேடையில் காணப்பட்ட ஜேர்மனியின் பிரபல பாடகரான ரொப்பிக் (Topic) பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படக் கூடிய பெரும் பதற்ற நிலையைத் தவிர்க்கும் நோக்குடன் தனது நிகழ்ச்சியை நிறுத்தாமல் தொடர்ந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
சிறிது நேரத்தில் விழா ரத்துச் செய்யப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். அங்கிருந்து வெளியேறிச் செல்லுமாறு மக்கள் கேட்கப்பட்டனர்.
தாக்குதலாளி தொடர்பான விவரங்கள் எதனையும் பொலீஸார் உடனடியாக வெளியிடவில்லை. விழிப்புடன் இருக்குமாறும் சந்தேகநபர்கள் எவரைப் பற்றியும் தகவல் தெரிந்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறு மக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.
இது போன்ற கத்தி வெட்டுக் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜேர்மனிய அரசு உறுதியளித்துள்ள போதிலும் அங்கு அடிக்கடித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">