பிரெஞ்சுத் திரையின் நட்சத்திர ஜாம்பவான் அலைன் டெலோன் மறைந்தார்

"உயர்ந்த பாத்திரங்களில் நடித்து உலகையே கனவுகாண வைத்தவர்"அதிபர் மக்ரோன் அஞ்சலிச் செய்தி

Kumarathasan Karthigesu-பாரிஸ்

பிரெஞ்சு சினிமாத் துறையின்”பொற் காலத்தின் பெரு நட்சத்திரம்” என வர்ணிக்கப்படுபவராகிய நடிகர் அலைன் டிலொன் தனது 88 ஆவது வயதில் இன்று காலமானார். பிரான்ஸின் மையப் பிராந்தியமாகிய Centre-Val de Loire இல் அமைந்துள்ள Douchy என்ற பழம்பெரும் கிராமத்தில் அவரது மரணம் சம்பவித்தது.அங்குள்ள தனது இல்லத்தில் மூன்று பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்கள் சூழ்ந்து நிற்க அவரது உயிர் பிரிந்தது- என்று குடும்பத்தினரால் வெளியிடப்பட்ட ஒரு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அலைனின் மறைவை அடுத்து அவரது Douchy இல்லப் பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். அரசியல் மற்றும் திரைத் துறைப் பிரமுகர்களின் அஞ்சலிச் செய்திகள் குவியத் தொடங்கியுள்ளன. ஒரு காலப்பகுதியில் உச்சம் தொட்ட அவரது புகழையும் வாழ்க்கை வரலாற்றையும் எடுத்து இயம்புகின்ற செய்திகள் பிரதான ஊடகங்களை நிறைத்துள்ளன.
அதிபர் எமானுவல் மக்ரோன் அலைனின் மரணம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் செய்தி ஒன்றைத் தனது சமூக ஊடகத்தில் வெளியிட்டிருக்கிறார். அலைன் டெலோன் தனது மிக உயர்ந்த பாத்திரங்கள் மூலம் உலகையே கனவுகாண வைத்தவர் என்று மக்ரோன் தனது செய்தியில் எழுதியுள்ளார்.”மறக்க முடியாத அந்த முகத்தின் மூலம் எங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்க முயற்சித்தார். ஒரு திரைக் கலைஞன் என்பதற்கு மேலாகப் பிரெஞ்சு தேசத்தின் ஓர் அடையாளம் அவர் ” -இவ்வாறு மக்ரோன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 8, 1935 ஆம் ஆண்டில் Hauts-de-Seine இல் பிறந்தவர். நான்கு வயதாகும் சமயத்தில் பெற்றோரின் விவாகரத்தினால் தனித்து விடப்பட்டவர். சிறுவர் பராமரிப்பகத்தில் வாழ்ந்தவர். உலகப் போரின் தொடக்கத்தில் தனது 17 ஆவது வயதில் கடற்படையில் இணைந்து மூன்று ஆண்டுகளில் விலகியிருந்தார்.
அலைன் டெலோனின் ஆரம்ப கால வாழ்க்கை பற்றிய தகவல்கள் இவை. அலைன் தனது காலத்தில் 90 படங்களில் நடித்துள்ளார். திரையில் மிகக் கடினமான பாத்திரங்களால் அறியப்பட்டவர். The Samurai மற்றும் Borsalino உட்பட அவர் நடித்த பல படங்கள் உச்சம் தொட்டிருந்தன.

படம் :2019 கேன் திரைப்பட விழாவில் அலைன் டெலோன்..

2019 இல் திரையுலக சாதனைக்காக அவருக்கு கௌரவ தங்கப் பனை விருது (honorary Palme d’or) வழங்கப்பட்டிருந்தது. அதனைப் பெற்றுக் கொண்ட நிகழ்வே அவர் கலந்துகொண்ட இறுதிப் பொது நிகழ்வு ஆகும். சினிமா உலகில் இருந்து விடைபெறும் விதமாக அங்கு அவர் ஆற்றிய உரை உணர்வுபூர்வமாக அமைந்தது. தனக்கு வழங்கப்பட்ட விருதை மரணத்துக்கு முன்னரான அஞ்சலி என்று குறிப்பிட்ட அவர், நான் போகப்போகின்றேன். ஆனாலும் உங்களுக்கு நன்றி கூறாமல் ஒருபோதும் போகமாட்டேன் – என்று கூறியிருந்தார்.
அலைன் டெலோன் சமீப காலமாக உடல் நலம் குன்றிய நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்தார். அவரது குடும்பத்துக்குள் ஏற்பட்ட முறிவுகள் குறிப்பாகப் பிள்ளைகளுடன் நேர்ந்த விலகல்கள் அடிக்கடித் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வந்தன.
அறுபதுகளில் பிரான்ஸின் திரைத் துறையின் பொற் காலம் எனக் குறிப்பிடப்படுகின்ற ஒரு சகாப்தத்தில் தோன்றிய நடிகர்களில் மிக முக்கியமானவர் அலைன் டெலோன்.
கொலைகாரன் முதல் சாதாரண மனிதன் வரை தான் ஏற்று நடித்த பாத்திரங்கள் மூலம் ரசிகர்களது இதயங்களைக் கொள்ளை கொண்ட அவர், ஒரு காலகட்டத்தில் சினிமாத் துறையில் மிகக் கவர்ச்சியான ஆண்மகனாக மிளிர்ந்தார். அதன் காரணமாகப் பல பெண் பிரபலங்கள் அவரது காலடியில் வீழ்கின்ற நிலை காணப்பட்டது. அந்த அழகும் கவர்ச்சியும் சினிமாக் கதைகளை விஞ்சுகின்ற விதமாக அவரது தனிப்பட்ட வாழ்வைப் பெரும் சர்ச்சைக்குரியதாக மாற்றியிருந்தன.
அலைனுக்கு ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களுமாக மூன்று பிள்ளைகள் உள்ளனர். மூவரும் இரண்டு பெண்களுக்குப் பிறந்தவர்களாவர். மூன்றாவது ஆண் பிள்ளை ஒருவர் உயிரிழந்துவிட்டார். தீவிர வலதுசாரி அரசியல்க்கொள்கை கொண்டிருந்த அவர் மரின லூ பென் அம்மையாருக்கு வழங்கி வந்த ஆதரவும் அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தது.
அண்மைய ஆண்டுகளில் மூன்று பிள்ளைகளும் அலைன் மீது வசைபாடும் பலவித குற்றச்சாட்டுகளையும் குறைகளையும் ஊடகங்கள் முன்பாக வெளியிட்டுவந்தனர். 2019 இல் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட பின்பு அவருக்கு அளிக்கப்பட்ட மருந்துச் சிகிச்சைகள் பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.
கடந்த ஏப்ரலில் நீதிபதி ஒருவர் தனது சொத்துக்கள் முழுவதையும் நிர்வகிக்கின்ற முழு உரிமையை அலைனிடம் இருந்து பறிக்கும் விதமான உத்தரவை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சொத்துப் பங்கீடுகள் தொடர்பான பிணக்குகளே அலைன் தனது பிற்காலத்தில் பிள்ளைகளால் தனித்துவிடப்பட்டமைக்குக் காரணமாய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அலைனின் பெண்களுடனான உறவுகளும் சர்ச்சைகளும் நாட்டின் சினிமா சஞ்சிகைகளின் அட்டைகளை நிறைத்து வந்துள்ளன. தொடர் கதைகளாகவும் வெளிவந்துள்ளன.
வண்ணமயமும் சர்ச்சைகளும் என வர்ணிக்கப்பட்ட அவரது தனிப்பட்ட வாழ்வை அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்தறிகின்ற ஆர்வம் அவரது ஐரோப்பிய ரசிகர்களிடையே மேலோங்கியிருந்திருக்கிறது.
பிரான்ஸில் மட்டுமன்றி உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருந்த அவர் அடிக்கடி வாய்ப்புக்கள் தேடிவந்த போதிலும் ஹொலிவூட் படங்களில் நடித்ததில்லை.
 
 
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">