பார் குமார்…. குடு திகா….: தொலைக்காட்சி விவாதத்தில் அடித்துக்கொண்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் நாளுக்கு நாள் அரசியல்வாதிகளின் கட்சி தாவல்கள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், நேற்று பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் விவாத இடைநடுவில் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் எம்.பிக்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகியோர் இவ்வாறு நிகழ்ச்சியின் இடைநடுவில் மோதிக் கொண்டுள்ளனர்.
மேலும், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது. இருப்பினும், தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி வேலுகுமார், கட்சியின் தீர்மானத்தை மீறி, தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் ரணிலுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குள் உள்ளக மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், ஒருவர் மாற்றி ஒருவர் பொது வெளிகளில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்ற நிலையில் இன்று வாய்த் தர்க்கம் கைகலப்பாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.