குரங்கு அம்மையின் புதிய திரிபு சுவீடனில் ஒருவருக்கு தொற்று
ஆபிரிக்காவுக்கு வெளியே பரவுவதாக WHO எச்சரிக்கை
Kumarathasan Karthigesu-பாரிஸ்
குரங்கு அம்மை (Monkeypox) வைரஸின் ஆபத்தான உப திரிபுகளில் ஒன்றாகிய கிளேட் – 1 (‘clade 1‘) தொற்று சுவீடனில் கண்டறியப்பட்டுள்ளது.
தலைநகர் ஸ்ரொக்ஹோம் (Stockholm) பிராந்தியத்தில் வசிக்கின்ற ஒருவருக்கே வைரஸ் தொற்றுக் கண்டறியப்பட்டிருப்பதாக அந்த நாட்டின் பொதுச் சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.
உலக சுகாதார நிறுவனம் குரங்கு அம்மை பரவல் தொடர்பாக சர்வதேச ரீதியான எச்சரிக்கையை வெளியிட்ட மறுநாள் ஆபிரிக்காவுக்கு வெளியே முதலாவது தொற்றுத் தொடர்பான இந்தச் செய்தி சுவீடனில் இருந்து வந்திருக்கிறது.
ஸ்ரொக்ஹோம் பகுதில் வசிக்கின்ற அந்த நபர் ஆபிரிக்காவில் சாதாரண குரங்கு அம்மையும் அதன் ஆபத்தானதும் தொற்று வேகமும் கொண்டதுமான கிளேட் – 1 உப திரிபும் அதிகம் பரவியுள்ள பிராந்தியத்தில் தங்கியிருந்தவர் என்று சுவீடிஷ் சுகாதாரத் துறையின் தலைமை அதிகாரி Olivia Wigzell செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
முதலாவது குரங்கு அம்மைத் தொற்றாளருக்கு இங்கே சிகிச்சை அளிக்கப்படுவதால் அது நாடெங்கும் பரவிவிடும் என்று மக்கள் அச்சம் கொள்ளவேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.
அண்மையில் கொங்கோ ஜனநாயகக் குடியரசில்(Democratic Republic of Congo) இந்த வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்பத்தில் 450 பேரின் உயிர்களைப் பறித்திருந்தது. தொடர்ந்து மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் அது பரவி வருகிறது.
Mpox என்று அழைக்கப்படுகின்ற குரங்கு அம்மையின் கிளேட்1, கிளேட் – 2 ஆகிய இரு உப திரிபுகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. கடந்த 2022 இல் கிளேட் – 2 தொற்றாளர்கள் பிரான்ஸிலும் ஐரோப்பிய நாடுகள் உட்படப் பரவலாக உலகெங்கும் கண்டறியப்பட்டிருந்தனர். கிளேட் – 2 உப திரிபு வலிமை குறைந்த ஒன்றாகும். ஆனால் இப்போது சுவீடனில் கண்டறியப்பட்டிருப்பது கிளேட் – 1 ஆகும். அது சுவீடனில் கண்டறியப்படுவதற்கு முன்பாக புறுண்டி, கென்யா, றுவாண்டா போன்ற நாடுகளில் பரவியிருந்தது.
குரங்கு அம்மை வைரஸ் நோய் பாலியல் உறவு, ஒருவருக்கு ஒருவர் நெருக்கமான தொடுகை, நெருக்கமாகப் பேசுதல், சுவாசித்தல் போன்ற வழிகளில் தொற்றக் கூடியது.
காய்ச்சல் அறிகுறிகள், தோல் புண்கள் என்பன பொதுவான குணங்குறிகள் ஆகும். நூறு தொற்றாளர்களில் நால்வர் என்ற வீதத்தில் மரணம் சம்பவிக்கிறது.
2022 இல் குரங்கு அம்மை பரவிய போது பிரான்ஸில் 500 க்கும் மேற்பட்டோர் தொற்றுக்குள்ளாகி இருந்தனர்.