ஐக்கிய மக்கள் சக்தியில் ஒரு எம்.பிக்கு 100 கோடி ரூபா பேரம் :எஸ்.எம்.மரிக்கார் தெரிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி ஜனாதிபதிக்கு ஆதரவளிக்குமாறு கட்சியின் உறுப்பினர் ஒருவரிடம் நூறு கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
மஹரகமயில் இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். செல்லும் இடமெல்லாம் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வருவார் என்ற எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு இலங்கையரும் ஐக்கிய மக்கள் சக்தியை சுற்றி அணிவகுத்து வருகின்றனர்.வெற்றி பெறுவதில் முன்னர் சந்தேகம் கொண்டிருந்த ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் தற்போது பலமான வெற்றி மனப்பான்மையுடன் உள்ளனர்.
இன்னும் 34 நாட்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றியீட்டுவார் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. கிராமத்தில், சந்தியில், கடைகளில், சந்தையில், முச்சக்கரவண்டியில், என நாட்டின் அனைத்து இடங்களிலும் சஜித்தின் வெற்றி குறித்து மட்டுமே பேசுகிறார்கள்.
சஜித்தின் வெற்றியே நாட்டில் நிலவும் அரசியல் யதார்த்தம் என போட்டிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கூறுகின்றனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அருகில் இருப்பவர்களுக்கும், சஜித் வெற்றி பெறுவார் எனத் தெரியும். இன்று மக்கள் வீட்டில் தமது வீடுகளில் மின்விளக்கை எரிய செய்யும் போதும், தண்ணீர் குழாயைத் திறக்கும்போதும் இருமுறை யோசிக்க வேண்டியுள்ளது. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்றி மகிழ்ச்சியற்ற நிலையில் வாழும் தேசமாக நாம் மாறியுள்ளோம். அதனால் எம்.பிகளுக்கு பேரம் பேசி வருகின்றனர். ஐ.ம.சவில் ஒரு எம்.பிக்கு 100 கோடி ரூபா பேரம் பேசப்பட்டள்ளது.’ என்றார்.