அர்ச்சுனா ஒரு பூகம்பமா? இல்லை பம்பரமா?

- தியாகன் -

குட்டை குளம்பியுள்ளது அது தெளியும் வரை பொறுத்திருந்தேயாகவேண்டும் என்று ஒரே வார்த்தையில் முடிக்க முடியும். ஆனால் கொஞ்சம் விரிவாக இந்தக் கட்டுரை வாயிலாக உங்களுக்கு அர்ச்சுனா தொடர்பில் கருத்துக் கூறுவதற்கு முற்படுகிறேன்.

 

அர்ச்சுனா
ஒரு புயலா? ஒரு பூகம்பமா?
ஒரு பம்பரமா?

 

சூழன்று கொண்டிருக்கும் பம்பரம் 360° பாகையில் இருந்து சுழற்றப்படும் பம்பரம் எப்போது சுழற்சி நின்று ஒரு நிலை எடுக்கிறாரோ அப்போதுதான் ஒரு ஆய்வாளனால் உண்மையில் சொல்ல முடியும் அர்ச்சுனா யார்? ஏன்? எதற்காக? என்ன செய்தார் என்பதை. இப்போதைக்கு அவதானித்துக் கொண்டிருக்கத்தான் முடியும்.

மேலே நான் சொன்னவற்றை கவனமாக புரிந்து கொள்ளுங்கள். பல காரணங்களால் அர்ச்சுனா என்ற திறமையான ஒரு மருத்துவனை பல்வேறு வகையில் நாம் பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது.

 

புயலின் மையம் அமைதியாகத்தான் இருக்கும் ஆனால் புயலின் வீரியத்தை பொறுத்து வெளியே பல்வேறு சூழ் நிலைகளை, காட்சிகளை மாற்றங்களை அது ஏற்படுத்திவிடும் என்பது எப்படி உண்மையோ அப்படி ஒரு மனிதன் புயலாகினால் விளைவுகளும் அமைந்து விடலாம்.

 

அர்ச்சுனாவை நான் புயலின் மையம் என்றோ அல்லது புயல்தான் என்றோ முடிவுக்கு வரவில்லை. உங்களாலும் வர முடியும் என நான் எண்ணவில்லை. ஒரு பம்பரமாக இப்போதைக்கு புரிந்து கொள்ளலாம்.

 

ஏன் சுழல்கிறது யாரால் சுழற்றப்படுகிறது பொறுத்திருந்துதான் சொல்ல முடியும்.

 

மருத்துவராக இருந்து போராளியான சேகுவேராவை நாம் அறிகிறோம். அதனால் ஒரு மருத்துவன் அரசியலை எண்ணிப்பார்கக் கூடாது என்று யாராவது சொன்னால் அது சரியான பார்வையல்ல.

அரச உத்தியோகத்தரான அமைதியான வேலுப்பிள்ளையின் மென்மையான கடைக்குட்டியே உலகை உலுக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு பிரபாகரன் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை என்பது நாமறிந்த அண்மைக்கால வரலாறு.

 

உங்கள் புரிதலுக்காக உங்களுக்கு தெரிந்த வட்டத்திற்கு வந்து கூறுகிறேன். ஈழதில் பல அற்புதமான, அற்பணிப்புடைய போராளிகளை ஈழப் போராட்ட இயக்கங்களில் நாம் கண்டிருக்கிறோம். கருணாவைப் போன்று கதாநாயகர்களாக இருந்து பிற்காலத்தில் கவலையோடு பார்கவேண்டியவர்களானவர்களையும் கண்டிருக்கிறோம்.

 

வரலாறு ஒரு போதும் பொய் சொல்லாது வரலாறு எனப்படுவது ஒரு போதும் நிகழ்காலத்தை பேசுவதில்லை. கடந்த காலத்தை மட்டுமே பேசுகிறது. புயல் ஓய்ந்த பின்,பெருமழை நின்றபின் வேகமாகச் சென்ற புகைவண்டி விபத்துக்குள்ளான பின், விமானம் ஆகாயத்தில் அல்லது தரையிறங்கும் போது விபத்துக்குள்ளான பின் என்பது போல தொடக்கத்தை வைத்து வரலாறு அமைவதில்லை இயங்கிக் கொண்டிருக்கும் எதைப்பற்றியும் சமகாலத்தை பார்த்தும் இறுதி முடிவை எடுக்க முடியாது.

 

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பெயர் குறிப்பிடக்கூடிய ஈழப் போராட்டத்தில் மில்லர், திலீபன் அங்கையற்கன்னி ஏனைய களங்களின் பெயரெடுத்த தளபதிகள் போராளிகள் இவர்களை அவதானித்தால் வியப்படைவீர்கள். ஆனால் அத்தனை தியாகங்களின் ஒட்டு மொத்த விடுதலைப் போராட்டத்தின் இன்றைய நிலை கவலைக்கிடமாகியுள்ளதல்லவா? ஈழப்போராட்டத்தின் தொடர் அதிர்வுகளில் ஒன்றுதான் இன்றைய சமகாலமும் இப்போது நாம் காணும் காட்சிகளும்.

 

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வரலாறு என்றொருவர் புத்தகம் எழுதினார். அவருக்கு நான் சொன்னேன் அவசரப்பட்டுவிட்டீர்கள். இது விடுதலைப்புலிகளின் வரலாற்றை எழுதுவதற்கான காலமல்ல குறிப்புகளை சேகரியுங்கள் யாரோ ஒருவர் அவற்றைத் தொகுத்து வரலாற்றை எழுத உதவும். புரியும் என நினைக்கிறேன்.

 

மனிதன் எண்ணங்களால் உருவாக்கப்படுகிறான் சூழ்நிலைகளால் வழிநடத்தப்படுகிறான் என்ற காப்மேஜரதும் அறிஞர் ஜோம்ஸ் ஆலனதும் வாதங்கள் வலிமையுடையவைதான் என்கிறது எனது அனுபவம்.

 

ஒரு மனிதனை அவனாகவும் அவன் பின்னிருந்து இயக்கும் பலரது எண்ணங்களின் கூட்டாகவும் பிரதிபலிப்பாகவும் அவற்றால் உருவாகும் சூழ்நிலையின் பிரதிபலிப்பாகவும் நாம் புரிந்து கொள்ளத் தவறினால் நாம் பகுத்தறிவற்ற மிருகங்களாகி விடுவோம். ஆகவே இயற்கையை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.

 

அர்ச்சுனா அடிப்படையில் சுறுசுறுப்பான மனிதன். மாற்றங்களை எண்ணி அவற்றின் அடிப்படையாக தன்னை இயக்குவிக்கும் இயல்புடையவராகவும் வெளிப்படையானவராகவும் காணப்படுகிறார். அர்ச்சுனா தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொண்ட பல்வேறு சூழ்நிலைகளும் அவரை இயக்கக்கூடும்.

மானுடவியல், உளவியல், தத்துவவியல், அரசியல் படித்தவர்கள் உலக இயக்கத்தில் மனிதர்களின் விளைவுகளை உணர்ந்தவர்கள் அர்ச்சுனாவை புரிந்து கொள்ள முடியும். ஆனால் தீர்ப்பெழுத முடியாது. ஏனெனில் அர்ச்சுனா ஏற்கனவே நான் சொன்னது போல ஒரு மனிதன். அவரை இப்போது பல்வேறுவகை எண்ணங்களும் சூழ்நிலைகளும் இயக்கிக் கொண்டிருக்கின்றன. அர்ச்சுனாவை வசைபாடாமல் அவதானமாக அவதானித்துக் கொண்டிருப்பதையும் தேவைப்பட்டால் அவருக்கு ஆதரவாக இருப்பதையும் நாம் கடைப்பிடிக்கலாம்.

 

அர்ச்சுனா இன்னொரு சேகுவேராவாக மாறுவாரா? அல்லது சிங்களத்தையும், இலங்கையையும், தமிழர்களையும் கையாள்கின்ற நாடுகளதும் தரப்புகளதும் வலிமை மிக்க உளவுத்துறைகளின் பொம்மையாக ஆடுவாரா? அல்லது இன உணர்வு கொண்ட ஈழத்தமிழர்களின் கூட்டு விளைவாகவோ, சில தரப்புக்களின் அரசியல் பகடையாகவோ உருளப்போகிறாரோ என்பதை கற்பனையில் முடிவெடுக்க முடியாது.

 

பம்பரம் சூழன்று கொண்டிருக்கிறது. அது எப்போது அமைதியடைந்து புகைவண்டியாகவோ பேரூந்தாகவோ அல்லது இறுதியில் தேடிக்காண முடியாததொன்றாக மறைந்து போகவோ கூடும். அதுவரை சாதாரண மக்கள் அர்ச்சுனா தொடர்பில் கற்பனைச்சிறகுகளை பறக்க விடாமல் அமைதியாக அவதானிப்பது அவசியமாகும்.