வங்கதேச கலவரத்தால்  தாயகம் திரும்பியுள்ள 6700 இந்திய மாணவர்கள்

வங்கதேச கலவரத்தால் அங்கிருந்து 6700 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில், சுதந்திர போராட்ட வீரர்களின் சந்ததிகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது. கல்லூரி மானவர்களின் போராட்டத்தால் கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிக்காமல் மூடப்பட்டுவிட்டன. இதனால், வங்கதேசத்தில் பயின்று வரும் இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பாக, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை அண்மையில் பகிர்ந்துகொண்டார்.

 இதுவரை வங்கதேசத்தில் இருந்து 6, 700 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர் என தெரிவித்தார். மேலும், வங்கதேச அரசிடமிருந்து நாம் சிறந்த ஒத்துழைப்பை பெற்றுள்ளோம். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. வெளியுறவுத்துறை சார்பில், 247 வேலை செய்யும் உதவி மையங்கள் செயல்பாட்டில் உள்ளன.

நெருங்கிய அண்டை நாட்டினருடன் நாங்கள் நட்புடன் நல்லுறவை பகிர்ந்து கொள்கிறோம். வங்கதேசத்தில் விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்று நாங்கள் நம்புகிறோம் என வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இன்று காலையில், தமிழக அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 42 தமிழக மாணவர்கள் வங்கதேசத்தில் இருந்து சென்னை திரும்பி இருந்தனர்.

அதே போல வங்கதேசத்தில் வன்முறை அதிகமானதை அடுத்து, அந்நாட்டு உச்சநீதிமன்றம், வங்கதேச அரசு கொண்டு வந்த 30 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த கூடாது என ரத்து செய்து உத்தரவிட்டது. அதன் பிறகு வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.