நாடாளுமன்றத்தையும் கலைக்க உத்தேசம்

ஜனாதிபதித் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது.இந்த சந்திப்பில் 50 இற்கும் அதிகமான எம்.பிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது ஜனாதிபதித் தேர்தலுடன் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான கோரிக்கையையும் சில எம்.பிகள் முன்வைத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தை கலைப்பதன் ஊடாக எந்தவொரு கட்சியாலும் பெரும்பான்மையை பெற முடியாததொரு சூழ்நிலை ஏற்படலாம். அதனால் தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள கூட்டணி அரசாங்கமொன்றை அமைக்கலாம் என குறித்த எம்.பிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

கடந்த காலத்தில் ரணில் விக்ரமவிங்க மற்றும் பசில் ராஜபக்சவுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்புகளின் போதும் நாடாளுமன்றத்தை கலைக்கும் யோசனையை பசில் முன்வைத்திருந்தார்.

என்றாலும், ஜனாதிபதி அதனை நிராகரித்திருந்தார். ஆனால், தற்போது அரசியல் ரீதியாக நெருக்கடியான சூழ்நிலையொன்று உருவாகியுள்ளதால் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான முயற்சிகளை ரணில் விக்ரமசிங்க எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி பல செய்திகள் வெளியாகியுள்ளன.