22ஆவது திருத்தத்தை வர்த்தமானியில் வெளியிட வேண்டாம் : நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச உத்தரவு

அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை வர்த்தமானியில் வெளியிடுவதை தவிர்க்குமாறு நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச நீதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் நிலவும் நிச்சயமற்ற தன்மையை போக்கும் நோக்கில் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் கடந்த 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. என்றாலும், அது 21ஆம் திருத்தச்சட்டமாகவே அரசியலமைப்புக்குள் உள்வாங்கப்பட்டிருந்தது. 21ஆவது திருத்தம் தொடர்பில் அத்தருணத்தில் நிலவிய சிக்கல்கள் காரணமாக 22ஆவது திருத்தமாக நிறைவேற்றப்பட்டு 21ஆக உள்வாங்கப்பட்டது.

 

இந்தநிலையில் ஜனாதிபதியின் பதவிக்காலம் உட்பட பல்வேறு சிக்கல்களை தீர்க்கும் வகையில் 22ஆவது திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான அனுமதி கடந்த அமைச்சரவையில் வழங்கப்பட்டது.இதற்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளதுடன், 22ஆவது திருத்தச்சட்டத்தை இத்தருணத்தில் நிறைவேற்ற அரசாங்கம் முற்பட்டால் கடுமையான போராட்டங்களை சந்திக்க நேரிடும் என எதிர்க்கட்சிகள் எச்சரிக்கையும் விடுத்துள்ளன. என்றாலும், அடுத்த நாடாளுமன்ற அமர்வில் இதனை சமர்ப்பிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நகர்வுகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், 22ஆவது திருத்தச்சட்டத்தை வர்த்தமானியில் வெளியிட வேண்டாம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, அமைச்சின் செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நாட்டில் நிச்சயமற்ற நிலைமையொன்றும் சந்தேகங்களும் எழுந்துள்ளதால் தேர்தல் முடியும்வரை இந்த விடயத்தை ஒத்திவைக்குமாறும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.