கூட்டமைப்பின் தலைவா் தெரிவு ஒத்திவைக்கப்பட்டது : செல்வம் அடைக்கலநாதனை தலைவராக ஏற்க தமிழரசு மறுப்பு.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரில் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் தெரிவு தொடர்பான கூட்டம் இன்று நடைபெற்ற போதும் புதிய தலைவர் தேர்வு இடம்பெறவில்லை. அது ஒத்திவைக்கப்பட்டது. இலங்கைத் தமிழரசு கட்சி, கட்சி ரீதியாக ஒன்று கூடி ஆராய்ந்து ஒரு முடிவெடுத்த பின்னர், இது பற்றித் தீர்மானிப்பதாக இன்றைய கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.
இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்பந்தன் காலமானமையை அடுத்து இந்தப்பதவி வெற்றிடமாகியுள்ளது. இந்தப் பதவிக்கு தம்மைத் தெரிவு செய்யும்படி கோரி ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தி வந்தார். இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பு எம்.பிக்களின் கூட்டம்நடைபெற்றது. சித்தார்த்தனைத் தவிர ஏனையோர் பிரசன்னமாகி இருந்தனர்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் மேற்படி தலைமைப் பதவிக்குத் தன்னுடைய பெயரை செல்வம் அடைக்கலநாதன் தாமே பிரேரித்தார். அது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிறிதரன் ஆரம்பத்தில் கருத்து வெளியிட்டார். அதனையே தமிரசுக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டு வழிமொழிந்தனர் எனத் தெரியவந்தது. செல்வம் தலைவராக இருப்பதில் ஆட்சேபனை ஏதுமில்லை. அவர் தலைவராக இருக்க, இதுவரை காலமும் இப்பபணியை சம்பந்தன் சார்பில் ஆற்றி வந்த சுமந்திரனே அவற்றைத் தொடர்ந்து செய்யலாம். இருவரும் இணைந்து இந்தப் பணியை முன்னெடுக்க முடியும். முன்னெடுக்க வேண்டும். ஆயினும், செல்வமும் ஏனையோரும் இப்போது ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி என்ற ஒரு புது கூட்டமைப்பை உருவாக்கி அதில் செயற்படுகின்றனர் என அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் அதில் இருந்து கொண்டு இங்கு தமிழரசு கட்சியின் பெயரில் இருக்கும் நாடாளுமன்ற குழுவுக்கு தலைமை தாங்க முடியாது. கூட்டமைப்பில் இருந்து கொண்டு தலைமை தாங்குவது வேறு. வேறு ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு இதற்குத் தலைமை தாங்குவது வேறு. அப்படி அவர்கள் தலைமை தாங்குவதானால் அது குறித்து தமிழரசுக் கட்சியில் கட்சி ரீதியாக நாங்கள் சில விடயங்களை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்’ என்று சிறிதரன் தெளிவாக வலியுறுத்தினார்.
சுமந்திரனும் அக்கட்சியின் ஏனையோரும் அதே நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். கூட்டமைப்பின் பெயரில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தரப்பை இணைத்துக் கொள்வதில் சிறிதரன் கடுமையான ஆட்சபனைகளை இன்றைய கலந்துரையாடலில் அடிக்கடி வெளிப்படுத்தினார். தங்களுடைய ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியை கைவிட்டு வரமுடியாது, அதன் பெயரிலேயே செயற்படுவோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை செல்வம் தரப்பினர் வெளிப்படுத்தியமையால் தலைவர் தெரிவு முடிவெடுக்கப்படவில்லை இறுதியில் தமிழரசு கட்சி, கட்சி ரீதியாக கூடி இந்த விடயத்தில் ஒரு முடிவை எடுத்து அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.