நாட்டில் ஸ்திரநிலை பேணுவதற்காகப் பிரதமர் பொறுப்பில் நீடிக்குமாறு அட்டாலுக்கு மக்ரோன் பணிப்பு

தொங்கு நாடாளுமன்றம் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என எச்சரிக்கை

கப்ரியேல் அட்டாலின் பதவி விலகலை நிராகரித்துள்ள அரசுத் தலைவர் மக்ரோன், நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காகத் தற்காலிகமாகப் பிரதமர் பொறுப்பில் நீடிக்குமாறு கேட்டிருக்கிறார். அதேசமயம் ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது ஆளும் மையவாதக் கட்சியின் பரப்புரைகளைத் தலைமை வகித்து நடத்தியமைக்காக அட்டாலுக்கு அவர் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
பாரிஸில் இன்னமும் 18 நாட்களில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. நாட்டின் சுதந்திர நாள் அணிவகுப்பு எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இவ்வாறு பிரான்ஸின் பெருமைக்குரிய முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ள காலப்பகுதியில் இடைத் தேர்தல் முடிவுகள் நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் நிலைவரத்தை உண்டாக்கியிருக்கின்றன.
குழப்பமான அணிகள் மத்தியில் இருந்து பிரதமர் ஒருவரைத் தெரிவுசெய்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு இன்னமும் நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது. இவற்றைக் கருத்திற்கொண்டே கப்ரியேல் அட்டாலைத் தொடர்ந்து பதவியில் நீடித்திருக்குமாறு மக்ரோன்
கேட்டிருக்கிறார் எனக் கருதப்படுகிறது.
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் நாடாளுமன்றத்தை மூன்றாக உடைத்திருக்கின்றது. ஒன்றுடன் ஒன்று கைகோர்க்க முடியாத – எதிரும் புதிருமான அரசியல் கொள்கை கொண்ட-மூன்று அணிகளுடன் நாட்டில் தொங்கு நாடாளுமன்றம் தோன்றியுள்ளது.
இந்த முக்கிய மூன்று அணிகளுக்குள்ளும் ஒன்றிலாவது பிளவுகள் ஏற்பட்டு எம்பிக்கள் அணி மாறி ஆதரவு வழங்கினால் மட்டுமே ஏதாவது ஓர் அணி அரசமைப்பது சாத்தியம் என்ற நிலை காணப்படுகிறது. எனினும் 182 ஆசனங்களுடன் நாடாளுமன்றத்தில் முதலாவது பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள இடதுசாரிகளது முன்னணி(Nouveau Front populaire) தனது தரப்பில் இருந்தே பிரதமர் நியமிக்கப்பட வேண்டும் என்று மக்ரோனிடம் கேட்டிருக்கிறது. சோசலிஸக் கட்சி, மெலான்சோனின் தீவிர இடதுசாரிக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சிகள் போன்றவற்றை உள்ளடக்கிய இடதுசாரி மக்கள் முன்னணி(Nouveau Front populaire) அதன் பொதுவான பிரதமர் வேட்பாளர் யார் என்பதை இன்னும் ஒரு வாரத்தில் தீர்மானிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த அணியில் இடம்பெறுகின்ற கட்சிகள் அரசமைப்பது தொடர்பான பேச்சுக்களைத் தமக்குள் நடத்தி வருகின்றன.
இதேவேளை, பிரான்ஸின் தேர்தல் முடிவுகள் தொங்கு நாடாளுமன்றத்தையும் ஆட்சி அரசியல் முடக்க நிலையையும்(“political deadlock“) ஏற்படுத்தி இருப்பது நாட்டினதும் முழு ஐரோப்பாவினதும் பொருளாதாரத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.