ராகுல் காந்தி கூறிய ஒரே வாக்கியம்: போர்க்களமாக மாறிய மக்களவை

ஒட்டுமொத்த இந்துக்களும் பாஜக, பிரதமர் மோடி இல்லை என ராகுல் காந்தி பேசியதற்கு பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக உறுப்பினர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். 18வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த வாரம் நடைபெற்று வரும் வேளையில், இன்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதலை எதிர்த்தவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது.

எங்களில் பலர் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டோம். இன்னும் எங்கள் தலைவர்கள் சிலர் சிறையில் உள்ளனர். ஏழைகள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மீதான ஆக்கிரமிப்புகளை எதிர்த்த அனைவரும் நசுக்கப்பட்டனர். பிரதமரின் உத்தரவால் நான் தாக்கப்பட்டேன். மகாத்மா காந்தியே ஒரு ஆவண திரைப்படத்தின் மூலம் தான் மக்கள் அறிந்து கொண்டனர் என பிரதமர் மோடி கூறுகிறார். தன்னை கடவுளின் அவதாரம் என்றும் பிரதமர் கூறுகிறார். ஒரு மதம் மட்டும் தைரியத்தை பேசவில்லை.

எல்லா மதங்களும் தைரியத்தை பற்றி பேசுகின்றன. ஒட்டுமொத்த இந்துக்களும் பாஜக, ஆர்எஸ்எஸ், பிரதமர் மோடி அல்ல. உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை.சகிப்பு தன்மை இல்லாத இந்துக்கள் பாஜகவினர். சிவ பெருமானின் இடது தோளில் திரிசூலம் இருக்கிறது. அது வன்முறையின் சின்னம் அல்ல. அது அகிம்சையின் சின்னம் என ராகுல் காந்தி மிக ஆவேசமாக தனது பேச்சை தொடர்ந்து இருந்தார். ராகுல் காந்தி பேசி கொண்டு இருக்கும் போதே பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ராகுல் காந்தி பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதமர் மோடி பேசுகையில், ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் அழைப்பது மிக மோசமான விஷயம் ‘ என கூறினார்.

அமித்ஷா பேசுகையில், இந்துக்கள் வன்முறையை பேசுகிறார்கள், வன்முறை செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் திட்டவட்டமாக கூறுகிறார். எந்த மதத்துடனும் வன்முறையை இணைப்பது தவறு. இது பொய்களை பேசும் கூடாரமல்ல. அவர் பேசியதற்கான ஆதாரங்களை அவையில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் பேசியதற்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என ஆவேசமாக தனது கருத்துக்களை மக்களவையில் பேசினார் அமித்ஷா. இதனை அடுத்து பாஜக உறுப்பினர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையிலும் தனது பேச்சை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து பேசிவந்தார்.