இரா.சம்பந்தன் அவர்களின் பூதவுடல் நாடாளுமன்ற அஞ்சலியை தொடர்ந்து இறுதிக் கிரியைகளுக்காக திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படும் எனத் தெரிவிப்பு
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் தனது 91ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் கொழும்பில் காலமானார்.
வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு நேற்றிரவு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் வழக்கமாக சிகிச்சை பெறும் லங்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, சேர்க்கப்பட்ட நிலையில் அவர் காலமானார் என்று அறிவிக்கப்பட்டது. இரா.சம்பந்தனின் பூதவுடல் இன்று திங்கட்கிழமை கொழும்பு,பொரளையிலுள்ள றேய்மன்ட் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் நாடாளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதைத்தொடர்ந்து இறுதிக் கிரியைகளுக்காக திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படும் என்று தமிழ் அரசுக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 1933 பெப்ரவரி 5ஆம் திகதி திருகோணமலையில் பிறந்தவரான இரா.சம்பந்தன் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி, கொழும்பு – மொறட்டுவை சென். செபஸ்ரியன் கல்லூரிகளிலும் கற்றார்.சட்டக் கல்வியை இலங்கை சட்டக் கல்லூரியில் கற்று சட்டத்தரணியானார்.
1977ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன்முறையாக நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். 1983 ஜூலைக் கலவரத்தை அடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தை புறக்கணித்தனர். தொடர்ச்சியாக 3 மாதங்கள் புறக்கணித்ததால் அனைவரும் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தனர். அப்போது சம்பந்தனும் தனது பதவியை இழந்தார்.
பின்னர், 2001ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியை உள்ளடக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்,ஈ. பி. ஆர். எல். எவ்., ரெலோ ஆகிய கட்சிகள் அங்கம் வகித்தன. இந்தக் கூட்டமைப்புக்கு இரா.சம்பந்தனே தலைமை தாங்கினார். அந்த ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரான அவர் தொடர்ச்சியாக 2004, 2010, 2015, 2020ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவராகவும் தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.