இன்று இரவு ஜோ பைடனும், டொனால்டு டிரம்பும் நேருக்கு நேர் விவாதம்
அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் ஆகியோருக்கு இடையில் நேரடி விவாத நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 5-ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம்.அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் இரவு 9 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்டு டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதிக்கின்றனர்.
அப்போது, தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு வாக்காளர்களிடம் ஆதரவு கேட்பார்கள்.தங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விளக்கம் அளிப்பார்கள். குறிப்பாக, குடியேற்றம், பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் தொடர்பான விவகாரங்கள்இ ரஷ்யா உக்ரைன் போர் மற்றும் காசாவில் இஸ்ரேலின் போர் பற்றிய கேள்விகள், சீன விவகாரம் போன்றவை விவாதத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.மொத்தம் 90 நிமிடம் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவாதத்தில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் உள்ளன.இதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.டிரம்ப்-பைடன் இருவரும் அதிபர் வேட்பாளர்களாக நேருக்கு நேர் விவாதம் செய்வது இது மூன்றாவது முறை ஆகும். இதற்கு முன்பு, 2020 தேர்தலில் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.