நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுவிட்டது :  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை புதன்கிழமை இலங்கை மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளார். இரவு 8 மணிக்கு ஜனாதிபதி இந்த உரையை அவர் நிகழ்த்த உள்ளதுடன், இந்த உரை தொடர்பான பல்வேறு விளம்பரங்கள் ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதோ ஓர் நற்சொய்தி’ என்ற வாசகத்தின் கீழே இவ்வாறு விளம்பரங்களை அரசாங்கம் வெளியிட்டு வருகிறது. ஆனால், ரணிலின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன. நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுவிட்டதாக ஜனாதிபதி அறிவிக்க உள்ளார். அவரால் எவ்வாறு அதனை அறிவிக்க முடியும்.

இது மக்களை ஏமாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சி.’ என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.சர்வதேச நிதிவிவகாரங்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனங்களே ஒரு நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதா இல்லையா என்பதை தீர்மானிக்கும். மாறாக ஆட்சியாளர்களால் தீர்மானிக்க முடியாது என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்னமும் பல்வேறு துறைகளில் இருந்து நாடு மீள வேண்டியுள்ளது. பரீட்சை எழுதியவர்களாக பெறுபேறுகளை வெளியிட முடியாது. அதனை பரீட்சைகள் திணைக்களத்தால்தான் வெளியிட முடியும். அவ்வாறான சூழலில் ரணில் எவ்வாறு நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதாக பொய் கூற முடியும்.’ எனவும் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார்.