மன்னார் காற்றாலைத் திட்டம்: அதானி நிறுவனத்திற்கான அனுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிப்பு.
மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்கப்படவுள்ள 480 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான அனுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேற வேண்டிய நான்காயிரம் குடும்பங்களுக்கு மேல் இந்தியாவில் வசிக்கின்றன.
இந்நிலையில் காற்றாலை மின் உற்பத்திக்கு காணி சுவீகரிப்பு, கனிய மண் அகழ்வுக்கு காணி சுவீகரிப்பு, என உள்ளுர் மக்களை மன்னாரிலிருந்து அகற்றும் சதிகள் மும்முரமடைந்துள்ளன. மன்னார் பிரதேச மக்களது எதிர்ப்புக்கள் மத்தியில் மன்னார் மற்றும் பூநகரி காற்றாலைகளின் மின்சாரத்தை கொள்வனவு செய்வது தொடர்பில் இலங்கை மின்சார சபைக்கும் அதானி நிறுவனத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படை தகவல்களை வழங்குமாறு மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இருந்த போதிலும், தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை எனவும் தகவல்களின்றி திட்டம் தொடர்பில் ஆய்வு செய்வது சாத்தியமில்லை எனவும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.ஏற்கனவே காற்றாலைக்கு எதிராக மன்னார் பொது அமைப்புக்கள் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதனிடையே இந்திய அதானிக்கெதிரான தமிழ் மக்களது எதிர்ப்புக்கள் மத்தியில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, வர்த்தக இராஜாங்க அமைச்சர் பொறுப்புக்கு மேலதிகமாக அவருக்கு காற்றாலைகள் தொடர்புபட்ட சுற்றாடல் அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.