நாடு முன்னோக்கி நகரவும் ஒன்றுபடவும் இதுவே ஒரே தெரிவு, வாக்கை கைவிடாதீர்!
தேசத்தின் பெருமைக்கான நீதியைத் தேர்ந்தெடுங்கள்! மே 2027 வரை பணிபுரிவேன் மக்களுக்கு மக்ரோன் கடிதம் ,அதிருப்தி ,சிரமங்களுக்கு அவர் வருத்தம் தெரிவிப்பு
Kumarathasan Karthigesu-பாரிஸ்
நாடாளுமன்றத்தைத் திடீரெனக் கலைத்த தனது அரசியல் தீர்மானம், நடைபெறவுள்ள தேர்தல் வாக்களிப்பு என்பன தொடர்பாக விளக்கம் அளித்து அரசுத் தலைவர் மக்ரோன் நாட்டு மக்களுக்கு எழுதிய விரிவான கடிதம் ஒன்றைப் பிராந்தியப் பத்திரிகைகள் வெளியிட்டிருக்கின்றன.
நாட்டை முன்னோக்கி நகர்த்தவும் மீண்டும் ஒன்றிணைக்கவும் இது ஒன்றுதான் ஒரேயொரு தெரிவு -என்று அவர் தனது தீர்மானத்தை அக்கடிதத்தில் விளக்கியிருக்கிறார்.
“நான் எடுத்த திடீர் முடிவு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களோடு சேர்ந்து இயங்குபவர்களுக்கும் கடினமானதாகவும் எதிர்பாராததும் ஆச்சரியமளிப்பதாகவும் அமைந்தது.
அவர்களோடு எனது நட்பையும் மரியாதையையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆகிய நாட்களில் வாகளிப்பையும் வாக்கு எண்ணும் பணிகளையும் ஏற்பாடுசெய்யவுள்ள நகர முதல்வர்கள் மற்றும் அலுவலர்கள் தன்னார்வலர்கள் ஆகியோருக்கு நன்றி கூறுகின்றேன்”
“எனது முடிவு உங்களில் பலருக்கு ஒர் ஆச்சரியம் என்பது எனக்குத் தெரியும், அது கவலையையும், நிராகரிப்பையும், சில சமயங்களில் கோபத்தையும் உங்கள் மத்தியில் தூண்டியது. அதை நான் நன்கறிவேன். புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கிறேன்.”
“உங்களுடைய பிரதிநிதிகளை நீங்களே தெர்ந்தெடுங்கள் எனச் சொல்வதும் உங்கள் மீது நம்பிக்கை கொள்வதும் ஜனநாயகம் மற்றும் பிரெஞ்சுக் குடியரசு ஆகியவற்றின் பெறுமானங்கள் அல்லவா?”
” இந்தத் தேர்தல் எங்களுடையது. நீங்களே அதை நடத்துகின்றீர்கள். எனவே அஞ்சாதீர்கள், விட்டுக்கொடுக்காதீர்கள், வாக்களியுங்கள். நமது தேசத்திற்கான மரியாதை, லட்சியம் மற்றும் நீதியைத் தேர்ந்தெடுங்கள். நாங்கள் அதற்குத் தகுதியானவர்கள். பிரான்ஸ் அதற்குத் தகுதியானது.”
வரவிருக்கும் தேர்தல் நம்பிக்கை மீதான தீர்ப்பு. அது தீவிரமானது, இந்தச் சந்தர்ப்பத்தில் நம் நாட்டிற்கும் நம் வாழ்க்கைக்கும் எது அவசியமோ அந்தத் தெரிவைத் தெளிவுபடுத்த வேண்டும். .ஏனென்றால் இந்தத் தேர்தல் ஒரு பெண் அல்லது ஆணுக்கான தேர்தல் அல்ல, இது குடியரசுத் தலைவர் தேர்தலோ அல்லது குடியரசுத் தலைவர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்போ அல்ல. 577 மக்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தல். அரசாங்கத்தின் பெரும்பான்மை மூலம் பிரான்ஸை யார் ஆட்சி செய்வது? என்ற ஒரேயொரு கேள்விக்கான பதில் சொல்லும் தேர்தல். -இவ்வாறு மக்ரோன் எழுதியுள்ளார்.
அரசுத் தலைவர் பதவி துறக்க வேண்டும் என்று எழுந்துள்ள கோஷங்கள் பற்றியும் மக்ரோன் அந்தக் கடிதத்தில் தனது நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
நான் குருடன் அல்லன். நாட்டில் ஜனநாயகம் சோர்வடைந்திருப்பதை நான் அளவிடுகிறேன். இப்போது தோன்றியுள்ள பிளவு மக்களுக்கும் நாட்டைக் கொண்டுநடத்துபவர்களுக்கும் இடையிலான பிளவு. அதை எங்களால் சரிசெய்ய முடியவில்லை.
இப்போதும் குடியரசின் இது போன்ற எல்லா தருணங்களிலும் நான் உங்கள் ஜனாதிபதியாகவும் பாதுகாவலனாகவும் மே 2027 வரை தொடர்ந்து செயலாற்றுவேன் என்பதை நீங்கள் நம்பலாம்.
இவ்வாறு மக்ரோன் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலின் முதற்சுற்று வாக்களிப்பு எதிர்வரும் ஞாயிறனறு (ஜூலை 30)நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரசாரங்களும் பேரணிகளும் சூடு பிடித்துள்ளன. தீவிர வலதுசாரிகள் ஆட்சிக்கு வருவதை எதிர்க்கின்ற ஆர்ப்பாட்டங்கள் பாரிஸ் உட்பட முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன.