ஓர்லி வரையான மெற்றோ-14 ரயில் சேவையை மக்ரோன் தொடக்கி வைத்தார்
பாரிஸ் மையத்திலிருந்து விமான நிலையம் செல்ல இனி 20 நிமிடநேர பயணம்
பாரிஸ் நகரின் மையப் பகுதியை ஓர்லி விமான நிலையத்துடன்-சுமார் இருபது நிமிடங்களில் – மிக வேகமாக இணைக்கின்ற சுப்பர் மெற்றோ-14 வழித்தட சேவையை அரசுத் தலைவர் மக்ரோன் நேற்றுத் திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்துள்ளார்.
மெற்றோ 14 வழித்தடத்தின் வடக்கு முனையின் புதிய கடைசித் தரிப்பிடமாகிய Saint-Denis-Pleyel நிலையத்தில் இருந்து புதிய சேவையைத் தொடக்கி வைத்த அவர் அங்கிருந்து Mairie de Saint-Ouen வரையான தூரத்துக்கு அதிகாரிகள் சகிதம் ரயிலில் பயணம் செய்தார்.
பாரிஸ் நகரில் தானியங்கி முறையில் இயங்குகின்ற இந்த மெற்றோ 14 (ligne 14) வழித்தட ரயில் சேவை மேலும் நவீனமயப்படுத்தப்பட்டு அதன் இரண்டு முனைகளிலும் நீடிக்கப்பட்டிருக்கிறது.
இதுவரை வழித்தடத்தின் தெற்குப் புற முடிவிடமாக இருந்த Olympiades நிலையத்தில் இருந்தே ஓர்லி விமான நிலையம் வரையான தூரத்துக்கு வழித்தடம் நீட்டிக்கப்பட்டுள்ளது. Olympiades நிலையத்தில் இருந்து விமான நிலையம் வரை செல்வதற்கு இனிமேல் 15 நிமிடங்கள் போதுமானதாகும்.
மொத்தம் 28 கிலோமீற்றர்கள் தூரத்துக்குப் புதிதாக எட்டு ரயில் நிலையங்களுடன் செய்யப்பட்டுள்ள இந்த மெற்றோ சேவை விஸ்தரிப்பு ஒலிம்பிக் போட்டிகளின் போது பாரிஸ் நகரில் சீரான போக்குவரத்து வசதிகளை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டு துரித கதியில் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளது.
ஓர்லி விமான நிலையம் ஊடாக வருகைதரவுள்ள லட்சக்கணக்கான பயணிகள் இந்த மெற்றோ ரயில் மூலம் ஒலிம்பிக் கிராமம் அமைந்துள்ள Saint-Denis பகுதியை இலகுவாக வந்தடைய முடியும்.