மக்ரோனிசம் முடிந்துவிட்டது! முன்பு இருந்திருக்கலாம்.. இன்று இல்லை..!!

முன்னாள் ஜனாதிபதி ஹொலன்ட் கருத்து

Kumarathasan Karthigesu-பாரிஸ்
பிரான்ஸில் மக்ரோனிசம் முடிந்து விட்டது. அது முன்பு இருந்திருக்கலாம். இப்போது இல்லை. எந்தவித விரோத உணர்வும் இன்றி இதை நான் கூறிக்கொள்கிறேன். -முன்னாள் அரசுத் தலைவரும் சோசலிஸ்ட் கட்சி உறுப்பினருமாகிய பிரான்ஷூவா ஹொலன்ட் இவ்வாறு ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்றத்தைக் கலைத்த மக்ரோனின் தீர்மானம் அரசியல் ரீதியாக அதிக விலைகொடுக்கின்ற ஒரு முடிவு என்று அவர் குறிப்பிடுகிறார்.
மக்ரோன் 2017 தேர்தலில் வெல்வதற்கு முன்னர் நாட்டில் வலது – இடதுப் பிளவுகளைச் (“right-left divide“) சமாளிப்பதற்காக “வலதுகளில் சிறந்தவர்களையும்” “இடதுகளில் சிறந்தவர்களையும்” தன்னோடு இணைத்துப் பயணிக்கப் போவதாகக் கூறியிருந்தார். அவரது அந்த நீண்ட சகாப்தம் இப்போது முடிவுக்கு வருகிறது. -இவ்வாறு ஹொலன்ட் தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
மையவாதியாகிய மக்ரோனை அரசியலில் அறிமுகப்படுத்தியவர் ஹொலன்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கியாளரான மக்ரோன் தனது புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்னர் அதிபர் பிரான்ஷூவா ஹொலன்டின் அரசாங்கத்தில் பொருளாதார அமைச்சராகப் பதவி வகித்திருந்தார்.
மக்ரோன் ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் அவரது ஆளும் கட்சி சந்தித்த பெரும் பின்னடைவை அடுத்து நாடாளுமன்றத்தைத் திடீரெனக் கலைத்த செயலை உடனடியாகவே கண்டித்த மூத்த தலைவர்களில் ஒருவராகிய ஹொலன்ட், அடுத்த வாரம் நடைபெறவுள்ள தேர்தலில் சோசலிஸக் கட்சியை உள்ளடக்கிய இடதுசாரி முன்னணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார் என்பது தெரிந்ததே.
பொருத்தமற்ற ஒரு சமயத்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்ததன் மூலம் ஆளும் கட்சி உட்பட அரசியல் கட்சிகளைப் பலவீனமாக்கித் தீவிர வலதுசாரிகளது எழுச்சிக்கு வழியேற்படுத்தி விட்டார் என்று மக்ரோன் மீது தலைவர்கள் பலரும் கண்டனக் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். மக்ரோனுக்கு மிக நெருக்கமான முன்னாள் பிரதமர் எத்துவா பிலிப்பும் அவர்களில் ஒருவர்.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">