செய்ன் நதியில் மழை வெள்ளம், ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கான ஒத்திகை தாமதம்

நீரில் மாசு அதிகரிப்பு

Kumarathasan Karthigesu-பாரிஸ்
ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னமும் ஒரு மாத காலம் மட்டுமே இருக்கின்ற நிலையில் பாரிஸ் செய்ன் நதியின் நீர் தொடர்ந்தும் மாசடைந்து காணப்படுகிறது.
கடந்த பல வாரங்களாகத் தொடர்ந்து நீடித்துவருகின்ற மழை காரணமாக நதியில் வெள்ளம் அதிகரித்துள்ளது. அதேசமயம் நதி நீர் நீச்சல் போட்டிகளை நடத்துவதற்கேற்ற தர நிலையை இன்னமும் எட்டவில்லை. அது மிகவும் மாசடைந்து காணப்படுகிறது.
நதி நீரின் மட்டம் சாதாரணமாகக் கோடை காலங்களில் காணப்படுகின்ற அளவை விடவும் ஐந்து மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது.
ஜூன் 21 ஆம் திகதி வெளியாகிய நதி நீர்ப் பரிசோதனை அறிக்கையில் இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதேசமயம், நதியில் எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை நடத்தப்படவிருந்த ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கான (la cérémonie d’ouverture) படகுகளின் ஒத்திகை முன்னோட்டம் வெள்ளம் காரணமாகப் பிற்போடப்பட்டிருக்கிறது.
ஒலிம்பிக் போட்டிகளின் சமீப கால வரலாற்றில் அதன் தொடக்க விழா முதல் தடவையாக மூடிய அரங்குக்கு வெளியே – திறந்த வெளியில் – செய்ன் நதி நீரின் மேலாக – நடத்தப்பட இருப்பது வாசகர்கள் அறிந்ததே. இம்முறை தொடக்க விழா பல்லாயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் நதி நீரின் மேலே பல நூற்றுக் கணக்கான மிதவைப் படகுகளில் அணிவகுத்து வருகின்ற விதமாகக்கண்கொள்ளாக் காட்சிகளுடன் ஏற்பாடாகியுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை மற்றும் இடிமின்னல் மழை கடந்த பல வாரங்களாக நீடித்து வருகிறது. கோடைப் பருவம் மழையும் மப்பும் குளிரும் கலந்த குழப்பமான வானிலையுடன் காணப்படுகிறது. தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருவது ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகளையும் பாதித்துள்ளது.
நதி நீர் மாசடைவதால் மரதன் நீச்சல் அடங்கலாக மூன்று விளையாட்டு நிகழ்வுகளின்(triathlon) போட்டிக் களங்கள் கடைசி நேரத்தில் இடமாற்றப்படலாம். எனினும் நதி நீர் மீண்டும் ஜூலை மாத நடுப்பகுதியில் தரப்பரிசோதனை செய்யப்படும்.
பாரிஸ் நகர மேயர் ஆன் கிடல்கோ மற்றும் அரசுத் தலைவர் மக்ரோன் ஆகிய இருவரும் ஒலிம்பிக்கிற்கு முன்னராகச் செய்ன் நதியில் இறங்கி நீச்சலில் ஈடுபட உள்ளனர்.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">