பிரிட்டனின் தமிழ் சமூகத்தின் வெற்றிக்கதை :  பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட்கமரூன் வெளியிட்ட செய்தி


பிரித்தானிய தமிழர்களிற்கான கென்சவேர்ட்டிவ் கட்சியின் அர்ப்பணிப்பு மிகவும் உறுதியானது தளர்ச்சியற்றது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட்கமரூன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனிற்கு தமிழ் சமூகத்தின் விலைமதிப்பற்ற பங்களிப்பை பாராட்டியுள்ள அவர் அனைவருக்கும் உண்மை நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய இராச்சியத்தின் பொதுதேர்தலிற்கு முன்னதாக வெளியிட்டுள்ள வீடியோவில் இதனை தெரிவித்துள்ள டேவிட்கமரூன் பிரிட்டனின் தமிழ் சமூகம் என்பது பெரும் வெற்றிக்கதை என குறிப்பிட்டுள்ளார். எங்கள் நாட்டின் வாழ்க்கைக்கு நீங்கள் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்குகின்றீர்கள் என தெரிவித்துள்ள டேவிட்கமரூன் வர்த்தகம் முதல் கற்பித்த மருத்துவம், உங்கள் உயிர்துடிப்புள்ள கலாச்சாரம் போன்றவற்றின் மூலம் நீங்கள் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்குகின்றீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

எங்கள் தேசிய வாழ்வின் பல பகுதிகளிலும் தமிழர்கள் முக்கிய பங்கினை வகிக்கிறீர்கள் எனவும் டேவிட் கமரூன் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். எமது தமிழ் சமூகத்தின் வெற்றிகள் பிரிட்டனின் எதனை சாதிக்க முடியும் என்பதற்கான ஒரு முன்மாதிரி என குறிப்பிட்டுள்ள டேவிட்கமரூன், உங்கள் அபிலாசைகளிற்கும் எதிர்காலத்திற்கான நம்பிக்கைகளிற்கும் எப்போதும் ஆதரவளிப்போம் எனவும் தெரிவித்துள்ளார். 15 வருடங்களிற்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்தும் டேவிட் கமரூன் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.பல பிரித்தானிய தமிழர்கள் இலங்கையின் அண்மைக்கால வலிகளால் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர் என்பது எனக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள டேவிட்கமரூன் இந்த வருடம் இலங்கையில் மோதல்கள் முடிவடைந்து 15 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன எனது நினைவுகள் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காணாமலாக்கப்பட்டவர்களை தேடுபவர்கள் குறித்ததாக உள்ளன என தெரிவித்துள்ளார்.

1948ம் ஆண்டின் பின்னர் இலங்கையின் வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்ட முதல் பிரதமர் அல்லது ஜனாதிபதி நான் என தெரிவித்துள்ள டேவிட் கமரூன் யுத்தத்தின் மோசமான விளைவுகள் குறித்து நான் நேரடியாக கேட்டறிந்துகொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
அன்று நான் வழங்கிய அர்ப்பணிப்பு இன்றும் உள்ளது நீடிக்கின்றது, என வீடியோவில் தெரிவித்துள்ள டேவிட்கமரூன் அனைவருக்கும் நீதி உண்மை பொறுப்புக்கூறலை பிரிட்டன் ஆதரிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகள் நிலைமாற்றுக்கால நீதி ஆகியவற்றிற்கான சர்வதேச முயற்சிகளிற்கு நாங்கள் தலைமைதாங்குகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.