ரணிலுக்கு எதிராக களம் இறங்கியுள்ள மக்கள் போராட்ட முன்னணி’ என்ற புதிய அரசியல் இயக்கம்

இலங்கையில் எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு ‘மக்கள் போராட்ட முன்னணி’ என்ற புதிய அரசியல் இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. மாற்றத்திற்கான இளைஞர்கள்’ என்ற அமைப்பின் தேசிய அமைப்பாளரும் ‘அறகலய’ செயற்பாட்டாளருமான லஹிரு வீரசேகர, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே, முன்னிலை சோசலிச கட்சியின் முக்கிய தலைவர் மற்றும் சட்டத்தரணி நுவான் போபகே, இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் தரிந்து உடுவரகெதர, முன்னணி சோசலிஸ்ட் கட்சி மற்றும் புதிய ஜனநாயக மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி ஆகியவை புதிய அரசியல் இயக்கத்தின் பிரதான அமைப்பாளா்களாக உள்ளனா்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே, ‘அமைப்பு மாற்றத்தை கோரி கடந்த காலங்களில் அரகலய மக்கள் போராட்டம் நடத்தப்பட்டது. கோரிய முறைமை மாற்றம் எதிர்ப்பாளர்கள் எதிர்பார்த்தது போன்று இடம்பெறவில்லை, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போதுள்ள முறைமையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளார்’ என்று தெரிவித்தார்.

தற்போதைய அபிவிருத்திகளின் கீழ், நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படவில்லை எனவும், மக்கள் தமது அன்றாட வாழ்வில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவா் சுட்டிக்காட்டினார். அந்தவகையில், இலங்கையின் எதிர்காலத்திற்காக புதிய அரசியல் அமைப்பை அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே புதிய அரசியல் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வசந்த முதலிகே மேலும் தெரிவித்தார்.