பிரித்தானியாவில் வேலையாட்களை விட நாய்க்கு அதிகம் செலவு செய்யும் ஹிந்துஜா குடும்பம்:  சுவிஸ் நீதிமன்றில் குற்றச்சாட்டு

பிரித்தானியாவின் முதல்நிலை செல்வந்தர்களான ஹிந்துஜா குடும்பம் ஒரு பணியாளரை விட செல்லப்பிராணியான நாய்க்கு அதிக செலவு செய்துள்ளதாக சட்டத்தரணிகள் நீதிமன்ற அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளனர்.

சட்டத்தரணிகளின் கூற்றுப்படி, ஹிந்துஜா குடும்பம், பணியாளர் ஒருவரை நாள் ஒன்றுக்கு 18 மணிநேரம், வாரத்தில் ஏழு நாட்கள், 6.19 பவுணுக்கு  வேலை செய்ய வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று திங்கட்கிழமை ஜெனீவா குற்றவியல் நீதிமன்றத்தில் சட்டத்தரணி யவ்ஸ் பெர்டோசா கூறுகையில், ‘ஹிந்துஜா குடும்பம் தங்கள் பணியாட்களில் ஒருவரை விட ஒரு நாய்க்காக அதிகம் செலவு செய்துள்ளதாக’ குறிப்பிட்டுள்ளார்.

செல்லப்பிராணிகள்’ என்ற தலைப்பில் ஒரு பட்ஜெட் ஆவணத்தையும் அவர் குறிப்பிட்டார். மேலும் தங்கள் குடும்ப நாய்க்காக ஒரு வருடத்தில் 8,584 சுவிஸ் பிராங்குகளை செலவிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணியாளர் ஒப்பந்தத்தில் வேலை நேர விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என்றும், ஊழியர்கள் கோரிக்கையின் பேரில் எந்த நேரத்திலும் பணியில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். குற்றச்சாட்டுகளின்படி, பணியாளர்களின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், முதலாளியின் அனுமதியின்றி வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தார். ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த 78 வயதான பிரகாஷ் ஹிந்துஜா, அவரது மனைவி, அவர்களது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதா ஆகிய நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்இ திங்களன்று, அஜய் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.