நீட் தேர்வு எதிர்ப்பு நாடு முழுவதும் வலுப்பெறுகிறது-திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. மாமல்லபுரத்தில் நடைபெற்ற கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார். பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் 40 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை வழங்கி உள்ளனர்.

நீட் தேர்வின் எதிர்ப்பு நாடு முழுவதும் வலுப் பெற்று வருகிறது. எங்களது எதிர்ப்பு குரலும் இனி தேசிய அளவில் இருக்கும். பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் தன்னிச்சையாக எடுத்த முடிவுகளை போன்று, தற்போது முடிவு எடுக்க முடியாது. நீட் தேர்வில் நடைபெற்றுள்ள குளறுபடிகளை கண்டித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி வலியுறுத்தும்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாமல் பின் வாங்கியிருப்பது என்ன ராஜதந்திரம் என்று தெரியவில்லை. அ.தி.மு.க.வுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.தமிழக மக்களின் நலனுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம். நீட் தேர்வை எதிர்த்து தமிழக மக்களின் குரலாக இதை முன்னெடுப்போம். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி வரி பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவோம். வலுவான ஒரு எதிர்கட்சியாக பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி அமரப்போகிறது. மக்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம். மத்தியில் கூட்டணி ஆட்சியாக அமைந்துள்ள பா.ஜ.க.வின் ஆட்சி 5 ஆண்டுகள் வரையில் நீடிக்குமா? என்பது சந்தேகம் தான் என்று  அவர் கூறினார்.