தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானம் எடுப்போம் :  எம்.எ.சுமந்திரன் தெரிவிப்பு


ஜனாதிபதித்தேர்தலில் தமிழ்பொது வேட்பாளர் நிறுத்தும் விடயத்தில் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுவில் நேற்று முடிவுகள் எடுக்கப்படவில்லை.  தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை இடம்பெற்றது.

அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன், தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானம் எடுப்போம். தேர்தலில் வேட்பாளர்கள் யார் என்று இன்னமும் தெரியாது. அவர்களுடைய தேர்தல் அறிக்கைகள் இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை. அதன்பின்னர் தீர்மானிப்பதாகவே முடிவெடுத்திருந்தோம்.

அத்துடன் தங்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ள இருவர் தமிழரசுக்கட்சியின் தலைமைகாரியாலத்திற்கு வந்து எங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். இது ஒரு ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை. நாங்கள் தொடர்ந்தும் இவ்வாறானவர்களுடன் பேசுவோம். ரணில் விக்கிரமசிங்க தன்னை வேட்பாளராக அறிவித்தால் அவரோடும் பேசுவோம். முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆனால் இதுவரை அதிகாரபகிர்வு தொடர்பாக பொதுவெளியில் சொல்ல கூச்சப்பட்டுக்கொண்டிருந்த வேட்பாளர்கள் போட்டிபோட்டுக்கொண்டு 13 ஆம் திருத்தத்தினை முழுமையாக அமுல் படுத்துவோம் என்று சொல்லத்தலைப்பட்டுள்ளனர்.

அது முழுமையான தீர்வுஅல்ல அதனை நாம் ஏற்கவில்லை ஆனால் அரசியலமைப்பில் உள்ளதையாவது அமுல்படுத்தவேண்டும் என்பதை நாம் சொல்லியிருக்கின்றோம். எனவே அந்த பேச்சுவார்த்தைகள் ஆராக்கியமாக இருந்தது. அவர்கள் சொன்னதை செய்வார்களா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கின்றது.  மும்முனைப்போட்டி ஒன்று ஏற்ப்படுமாக இருந்தால் தமிழ் பேசுகின்ற மக்களின் வாக்குப்பலம் பிரதானமாக இருக்கும். இதனை நாம் உதாசீனம் செய்யக்கூடாது. மிகவும் கவனமாக எமது பேரம்பேசுதலை நடத்தவேண்டும்.

சந்தர்ப்பத்தை சரியாக உபயோகப்படுத்தவேண்டும் என்ற கருத்தோடு நாங்கள் இருக்கின்றோம்.  தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாக கடந்த மத்தியகுழு கூட்டத்திலேயே பலர் எதிரான கருத்துக்களை தெரிவித்திருந்தனர். எனவே இன்று அதைப்பற்றி பேசவில்லை. மக்களது கருத்துக்களையும் அறிந்து தனிப்பட்ட கருத்துக்களை சொல்வதற்கான சுயாதீனம் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.  அத்துடன சிவாஜிலிங்கம் வழமையாகவே நிற்பவர். பழக்கதோசத்தில் அவர் நிற்கலாம் அதில் எனக்கு பிரச்சனையில்லை’ எனக் கூறியுள்ளார்.