உலகத் தலைவர்களை சந்தித்த திருத்தந்தை
இம்மாதம் 13 முதல் 15 முடிய, தெற்கு இத்தாலியில் நடைபெற்ற, வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் இணைந்து உருவாக்கிய G7 அமைப்பின் உச்சி மாநாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதில் பங்கேற்ற பல்வேறு நாட்டுத் தலைவர்களை நேரில் சந்தித்து உரையாடினார்.
தன்னுடைய உரைக்கு முன் சர்வதேச நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், உக்ரைன் மற்றும் பிரான்ஸ் அரசுத்தலைவர்கள், கனடாவின் பிரதமர் ஆகியோரைச் சந்தித்த திருத்தந்தை அவர்கள், தன் உரைக்கு பின்பு இந்திய பிரதமர், அமெரிக்கா, பிரேசில், கென்யா மற்றும் துருக்கி நாட்டு அரசுத்தலைவர்களை சந்தித்து அவர்களோடு நீண்ட நேரம் உரையாடினார்.
இவ்வமைப்பில் இத்தாலி, அமெரிக்கா, கனடா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன.
இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியால் அழைக்கப்பட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், G7 அல்லாத உறுப்பு நாடுகள் கலந்துகொள்ள வழங்கப்பட்டிருக்கும் அமர்வில், செயற்கை நுண்ணறிவு மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து உரையாற்றினார். G7 உச்சி மாநாட்டில் திருத்தந்தை ஒருவர் உரையாற்றுவது இதுவே முதல்முறையாகும்.