ஜேவிபியின் கீழ்  அணிதிரளும் ஒய்வு பெற்ற பொலிஸ் படை: அச்சத்தில் அரசாங்கம்

தேசிய மக்கள் சக்தியின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் ஒய்வு பெற்ற பொலிஸ் கூட்டமைப்பினால் அரசாங்கத்துக்குள் பல்வேறு குழப்பங்களும் நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நூற்றுக்கணக்கான ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகள் எவ்வாறு தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளனர் என விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான உத்தரவுகள் புலனாய்வுத்துறைக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு ஊழல் – மோசடிகள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பிலான பல ரகசிய தகவல்கள் இந்தக் குழுவில் உள்ள ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு தெரிந்துள்ளதால் இது தேர்தல் காலத்தில் ஆளுங்கட்சிக்கு பாரிய பின்னடைவையும் இழுக்கையும் ஏற்படுத்தும் என அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது.

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரட்ன , மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ,சானி அபேசேகர ஆகியோர் தலைமையிலேயே தேசிய மக்கள் சக்தி இந்த படைப் பிரிவை உருவாக்கியுள்ளது. இவர்களது செயல்பாடுகளை தொடரவிட்டால் அது அரசாங்கத்துக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவர்களை முடக்கும் பல்வேறு நகர்வுகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.